எழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்?

writings அப்புறம் எங்களுக்கும் அந்த பைத்தியம் பிடித்தது. சிறுபத்திரிக்கை ஆரம்பிக்கும் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அது ஒரு தனி அனுபவம். அதில் வந்த  படைப்புகள், சுவராஸ்யமான விஷயங்களை இங்கே ஒரு தொடராக எழுதும் எண்ணம் இந்த நேரத்தில் தோன்றுகிறது. பார்ப்போம்.)

இது நடந்தது 1992 இறுதியில். அப்போது கம்ப்யூட்டர் கிடையாது. அதனால் டிடிபி கிடையாது. கையாலே அச்சுக் கோர்க்க வேண்டும். டிரெடில் மெஷின்.  சாத்தூரில் இருந்து அப்படியொரு ப்த்திரிக்கையின் வடிவமைப்புக்கு என்னவெல்லாம் சாத்தியங்கள் உண்டோ அதையெல்லாம் முயன்று பார்த்தோம். மிகச் சின்ன  அச்சாபீஸ் அது. பிட் நோட்டீஸ், சின்ன போஸ்டர்கள் மட்டும் அடித்துக் கொண்டிருந்த அந்த இடத்தில் கதைகளும், கவிதைகளும், எங்கள் சிந்தனைகளும்  நுழைந்தன. பெரிய ஆபிஸ் என்றால் அவர்கள் சொன்ன நேரத்துக்குத்தான் கிடைக்கும். நம் அவசரம் புரியாது. நம் ரசனையும் புரியாது.

அதன் உரிமையாளரும் அங்கே தொழிலாளியாய் இருந்தார். இன்னொருவர் அச்சுக் கோர்ப்பார். இரண்டு பேருமே எங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாகி  விட்டனர். அச்சுக் கோர்ப்பவரின் பெயர் மறந்துவிட்டது. ஏசுவடியான் என்றே தவறாய் ஞாபகத்தில் வந்து கொண்டிருக்கிறது. (எப்போதும் எங்களுக்குள் மதம்  குறித்த தர்க்கங்கள் வரும். ஆவியெழுப்பும் கூட்டங்கள் பக்கத்தில் எங்காவது நடந்தால் போய் விடுவார்.) என்னைப் பார்த்ததும் சிரித்து விடுவார். “சார்  வந்துட்டாலே சந்தோஷம்தான்..” என்பார். டீக்கள் வாங்கி, குடித்துக் கொண்டே அரட்டையோடு வேலைகள் நடக்கும்.

அவரது கைகளையே பார்த்துக் கொண்டிருப்பேன். இரும்பு வார்ப்பிலான ஒவ்வொரு எழுத்துக்களும் சின்னச் சின்னக் கட்டங்களாய் இருக்கும் ஒரு மரத் தட்டில்  அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கண்கள் தாள்களில் இருக்கும் எழுத்துக்களைப் பார்க்கும். கைகள் மிகச்சரியாய் அந்த எழுத்துக்களைத் தானேத் தேடி இரும்புச்  சட்டத்தில் கோர்க்கும். மிகத் துரிதமான, தன்னிச்சையான  இந்தக் காரியங்கள் பெரும் அதிசயம் போலத் தோன்றும். இந்த நுட்பத்திலிருந்துதான் டைப்ரைட்டர்,  கணிணியின் தட்டச்சு முறைகளும் உருவாகியிருக்க வேண்டும்.

அங்கேயே திருத்தி, சரி பார்க்க வேண்டியிருந்ததால், எப்படியும் மாதத்தின் கடைசி நான்கைந்து நாட்களில் பெரும்பாலான நாட்கள் அங்கேயே கிடப்பேன்.  வடிவமைக்கும் போது, “என்ன சார் இவ்வளவு இடம் இங்கே சும்மா இருக்கு. இங்கே என்ன வரணும்.” என்பார். “அங்க சும்மா இருக்கட்டும். அதுதான் அழகு.”  என்றால் புரியாது. வார்த்தைகளின்றி என்னைப் பார்த்துச் சிரிப்பார். பத்திரிக்கை சரியாய்க் கொண்டு வரும் அவசரத்தில், பல இரவுகளிலும் அவர்களை விடாமல்  தொந்தரவு செய்வேன். விடாமல் அவரது கைகள் இயங்கிக் கொண்டிருந்தன. விரல்கள் எழுத்துக்களோடு பேசிக்கொண்டு இருந்தன.

ஒருநாள் அவரிடம் கேட்டேன். “இப்படி அச்சுக் கோர்த்தவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மனிதர்களாகி இருக்கிறார்கள் தெரியுமா?”. “அப்படியா சார்...?” என்றார்.  “எழுத்தாளர் ஜெயகாந்தன் உங்களை மாதிரி அச்சுக் கோர்த்தவர்தான்” என்றேன். அதற்கும் ஆச்சரியமாய் ஒரு “அப்படியா” போட்டு விட்டு வேலையத்  தொடர்ந்தார். அச்சாபிஸ் உரிமையாளரிடம் எப்போதும் கிண்டல் பேசி விளையாடுவேன். அப்போதெல்லாம், ஏசுவடியான் சிரிப்பது தெரியாமல் சிரிப்பார். வயசு  அப்போது அவருக்கு நாற்பத்தைஞ்சு இருக்கும்.

எங்கள் எழுத்துக்களின் முதல் வாசகரும் அவரே. “சார்... அந்தக் கதை ரொம்ப நல்லாயிருந்துச்சு” என்பார். சிலவற்றை புரியவில்லை என்பார். நான் சிரித்துக்  கொள்வேன். ஒவ்வொரு இதழ் வெளிவரும்போதும், அதிலொன்றை தனக்குக் கேட்டு வாங்கிக் கொள்வார்.

நாலு இதழ்கள் வந்த பிறகு, எங்களால் பத்திரிக்கை நடத்த முடியவல்லை. நேரம், நிதி என பொதுவான காரணங்கள்தான். வெவ்வேறு பணிகளில் வாழ்வு  ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது நாமும் பத்திரிக்கை நடத்தியிருக்கிறோம் என ஞாபகம் வந்து போகும். கம்யூட்டர் வந்தபிறகு திரும்பவும் அந்த  ஆசை தோன்றியது. நேரம்தான் திரும்பவும் பயமுறுத்தியது. தொழிற்சங்க வேலைகளில் மூழ்கிப்போயிருந்தேன்.

சென்ற மாதம் ஒருநாள் வக்கீல் ஒருவரைப் பார்க்க நண்பர்களோடு சென்றிருந்தேன். எங்களைப் பார்த்ததும் டீ வாங்கி வரச் சொன்னார். பேசிக்கொண்டு  இருந்தோம். டீ கொண்டு வந்தவர் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சார்... என்னயத் தெரியுதா...”

டீ குடித்துக்கொண்டிருந்த நான் அப்போதுதான் உற்றுப் பார்த்தேன். சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. எங்கள் எழுத்துக்களைக் கோர்த்த ஏசுவடியான்தான்.  சட்டென்று உடலெல்லாம் ஆடிப்போன மாதிரி இருந்தது. எழுந்து “எப்படியிருக்கீங்க...” என்று அவர் கைகளைப் பிடித்தேன். மெலிந்து, வயதாகி பாவம்  போலிருந்தார்.

“நல்லாயிருக்கேன். இங்கேதான், சார் கிட்ட ஆபிஸ் பாயாய் இருக்கேன்”

“என்னாச்சு அச்சாபீஸ்? ”

“எங்க சார் முடியும்... கம்ப்யூட்டர் வந்த பிறகு நம்மை யார் தேடுவா..? அச்சாபிஸை மூடி பல வருஷமாச்சு”

நான் மௌனமாயிருந்தேன். “சார்... அந்தப் பத்திரிக்கையெல்லாம் நான் பத்திரமா வச்சிருக்கேன்..” முகம் விரியச் சொன்னார். எனக்கு அழுகை  வந்துவிடும்போல் இருந்தது. அடக்கிக் கொண்டேன்.

வக்கீல் “இவரை உங்களுக்குத் தெரியுமா..” என்றார். நான் சொன்னேன். வக்கீலுக்கு சுவராஸ்யம் இருப்பதாகத் தெரியவில்லை. என்னிடம் உம்  கொட்டிக்கொண்டே அவரிடம் “இந்தாப்பா... பழைய கணக்கையெல்லாம் சேர்த்து கொடுத்துரு” என்றார். நான் சொல்வதை நிறுத்திவிட்டு ஏசுவடியானை  கவனித்தேன். அவர் காலியான டீ தம்ளர்களை எடுத்து வளையம் வளையமான அந்தக் கம்பிகளுக்குள் கோர்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கைகள் லேசாய் நடுங்கிக்கொண்டு இருந்தன. எழுத்துக்களின் ஆட்டம்.

 

*

கருத்துகள்

42 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. dear mathav

    can you make out from a distance at Sattur that
    I am in tears
    I am shattered
    I am put out of place

    Life is beautiful, say film posters.
    Life is gruesome, say our
    experiences.
    But, life is pregnant with struggles to float on hopes, rove with determination and sing with concern for fellow beings....


    Real life experiences are more emotion-packed than any imaginative short story.
    you have proved you are great again, mathav.
    pl dedicate this story to that humble worker, eternal worker and eternal goodbeing our Com Yesuvadiyan...
    If possible, read to him his own story!

    svv

    பதிலளிநீக்கு
  2. பத்திரிகைகள் எவ்வாறு உருவாகின்றன எனப் பார்க்கும் ஆவல் சிறுவயது முதல் எனக்குண்டு. இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை.

    ஆவலுடன் வாசிக்கத் தொடங்கிய என்னை விழி கசியச் செய்தன உங்கள் இறுதி வரிகள்.

    இப்படி எத்தனை ஏசுவடியான்களோ? :(

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்ச்சியான பதிவு. மிக்க நன்றி. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. /எனக்கு அழுகை வந்துவிடும்போல் இருந்தது. அடக்கிக் கொண்டேன்./

    naan azuthEvittEn. (solla vetkamaayirukkiRathu. aanaal uNmai.)
    nalla messege ulla anupavap pakirvu. ethaavathu ithazukku anuppungkaLEn.
    rompa nallaa irunthathu.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் அடக்கிய கண்ணீரை இந்தப் பதிவை படிப்பவரின் கண்ணில் வரச்செய்துவிட்டீர்கள்.

    படித்த முடித்தபின் ஒரு நிமிடம் எதுவுமே தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் எழுத்தில் காட்சிகள் கண்முன் விரிந்தன.

    அச்சகத்தில் வேலை செய்யும் போது எழுத்து கோர்க்கும் பணிப்பயிற்சியில் ஈடுபட்டு பயில முடியாது போய் விட்டது

    பதிலளிநீக்கு
  7. \\அமிர்தவர்ஷினி அம்மா said...

    நீங்கள் அடக்கிய கண்ணீரை இந்தப் பதிவை படிப்பவரின் கண்ணில் வரச்செய்துவிட்டீர்கள்.

    படித்த முடித்தபின் ஒரு நிமிடம் எதுவுமே தோன்றவில்லை.\\

    மிகச்சரியே

    பதிலளிநீக்கு
  8. வார்த்தைகளில்லை.

    நீண்ண்ண்ட மெளனம்.

    பதிலளிநீக்கு
  9. \\அமிர்தவர்ஷினி அம்மா said...

    நீங்கள் அடக்கிய கண்ணீரை இந்தப் பதிவை படிப்பவரின் கண்ணில் வரச்செய்துவிட்டீர்கள்.

    படித்த முடித்தபின் ஒரு நிமிடம் எதுவுமே தோன்றவில்லை.\\

    கண்டிப்பாக தோழரே..

    எனக்கும் இப்படி நடந்துருகுங்க..ரொம்ப நன்றி கண்டிப்பா உங்கள ஒருநாள் நான் பார்ப்பேன்.

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  10. வாசித்து முடித்ததும்
    கொஞ்சம் யோசித்தேன்
    அந்த திடீர் சந்திப்பின் பின் வீடுசென்ற ஏசுவடியான் மனத்தில் என்னென்ன எண்ணங்கள் கோர்க்கப்பட்டிருக்குமென்று....

    நெகிழ்ச்சியான பதிவு. மிக்க நன்றி. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  11. நெகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
  12. //அதில் வந்த படைப்புகள், சுவராஸ்யமான விஷயங்களை இங்கே ஒரு தொடராக எழுதும் எண்ணம் இந்த நேரத்தில் தோன்றுகிறது.//

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. மாதவ்,

    டெக்னாலஜியில் நாம் இழந்தது மனிதத்தை.

    எல்லாத் தியேட்டர்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஆளுயர கட்டவுட்களையும் பேனர்களையும் வரைந்த ஓவியர்கள் இன்று எங்கே?

    பதிலளிநீக்கு
  14. மனதுக்குள் சில நேரங்கள் சிந்தனை செய்யவைத்தது உங்கள் பதிவு....

    ஏசுவடியானைப் போன்று பலரைச் சந்தித்திருக்கிறேன். காரணங்கள் இல்லாத வறுமையில் தங்களை நுழைத்து இப்படியாக திரிகிறவர்கள்..

    உங்கள் நடையில் ஒரு எழுத்தாளரும் வந்து சென்றார்..... படைப்பின் தரம் அத்தகையது!!

    கண்ணீரென்று நினைத்துக் கொள்ளுங்கள் இப்பதிவை!!!

    பதிலளிநீக்கு
  15. படித்து முடித்ததும் என்ன பின்னூட்டுவது எனத் தெரியவில்லை. எனக்கும் லேசாக கைகள் நடுங்கியது

    பதிலளிநீக்கு
  16. கடைசி வரிகள்
    கண்களில் இருந்து வரும் தபால்காரன் முலம் முத்தம் கொடுத்தது சென்றது என்னோட இதழ்களுக்கு

    பதிலளிநீக்கு
  17. நெகிழ வைக்கிற விசயம்

    சுடுகிற உண்மை

    உணர்வோடு எழுதி இருக்கிறீர்கள்..!

    பதிலளிநீக்கு
  18. வேணுகோபாலன்!

    கவிதையாய் இருக்கிறது உங்கள் உணர்வுகள். தமிழில் எழுதியிருந்தால் உங்கள் அற்புதமான நடையும், உள்ளமும் இன்னமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
  19. ரிஷான்!

    விழுது என்னும் சிறுபத்திரிக்கை ஆரம்பித்தது குறித்து விரைவில் எழுதுகிறேன். தெரிந்து கொள்ளுங்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. முத்துவேல்!

    இங்கு அழுகை என்பது நாம் மனிதர்கள் என்கிற பிரக்ஞையை நமக்கே உணர்த்துகிறதாய் இருக்கிறது.

    பொதுவாக, பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்புவதில்லை. உங்களைப் போல் சிலர் இங்கு மற்ற பதிவுகளைப் படித்து விட்டு அபிப்பிராயம் சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  21. அமிர்தவரிஷிணி அம்மா!

    தங்கள் கண்ணீருக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வெயிலான்!

    ரொம்ப நாளாய்க் காணோம். உங்கள் பதிவுகளையும் காணோம். நல்லாயிருக்கீங்களா? விருதுநகர் வந்தால், அப்படியே சாத்தூருக்கும் வர்றது.

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. நட்புடன் ஜமால்!

    நன்றி. அழுகை நமக்கு சிலநேரம் வரப்பிரசாதம். சிலநேரம் வடிகால்.

    வண்னத்துப்பூச்சியார்!

    மௌனத்தை உடைத்து விட்டீர்களா.
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. முகமது பாருக்!

    நீங்க எங்க இருக்கீங்க. நாம் கண்டிப்பாக சந்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  25. தங்கராஜா ஜீவராஜா!

    ரொம்ப நாளாய் பார்க்கவில்லை. ஜீவநதியில் பதிவுகளும் எழுதவில்லை?

    வருகைக்கு நன்றி.

    கவின!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. கார்த்திகேயன்!

    கண்டிப்பாக விரைவில் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  27. வேலன்!

    உண்மைதான். மனிதம் மட்டுமல்ல... பலருடைய வாழ்க்கையும், திறமைகளும்தான். தான்.

    பதிலளிநீக்கு
  28. ஆதவா!

    முரளிக்கண்னன்!

    உங்கள் உணர்வுகள் உங்கள் மீது இருக்கும் மதிப்பை அதிகரிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  29. சுரேஷ்!

    கிங்!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. உங்கள் நடையில் ஒரு அற்புதமாக பதிவு.எழுதியிருக்கிறீர்கள்

    நீங்கள் அடக்கிய கண்ணீரை இந்தப் பதிவை படிப்பவரின் கண்ணில் வரச்செய்துவிட்டீர்கள்.

    நீண்............ட மெளனம்.

    பதிலளிநீக்கு
  31. ரொம்ப நாளாய் பார்க்கவில்லை. ஜீவநதியில் பதிவுகளும் எழுதவில்லை?

    என்ன செய்வது எமது வைத்தியசாலை முழுவதையும் நிறைத்திருக்கிறது யுத்தத்தின் கோரம்....... அதனால்தான் இந்த இடைவேளி

    இருந்தும் எனது அப்பப்பாவின் படைப்புக்களை தொடர்ந்தும் வலையேற்றி வருகிறேன்.. இப்போது அவருக்கு வயது 92.. தொடர்ந்தும் எழுதிகொண்டிருக்கிறார்...


    http://vellautham.blogspot.com/

    பதிலளிநீக்கு
  32. மாதவராஜ்,

    'வாசிப்பில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது... அந்தநிலையை நான் கடந்துவிட்டேன்...' என நெஞ்சை நிமிர்த்தி திமிருடன் இருந்தேன். இந்தப் பதிவு அந்த எண்ணத்தை சவுக்கால் அடித்துவிட்டது.

    படிக்கும்போதே கண்கள் லேசாய் நடுங்கிக்கொண்டு இருந்தன. எழுத்துக்களின் ஆட்டம்....

    பதிலளிநீக்கு
  33. இப்ப திரவியம் தேடிக்கொண்டு இருப்பது அபுதாபியில், கடுப்பா இருக்கு இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஊருக்கு வந்துடுவேன், அப்ப கண்டிப்பா தேடி வந்து பார்ப்பேன்.

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  34. நம்பி!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பைத்தியக்காரன்!

    உங்கள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    முகமது பாருக்!

    எதிர்பார்க்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. தங்கராஜா ஜீவராஜ்!

    கண்கள் பனிக்கின்றன. என்ன சொல்வது எனத் தெரியவில்லை. உங்கள் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொள்ள கைகளும், மனதும் துடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. Could you please add the old posts to your template? I am not sure whether I am missing it.

    பதிலளிநீக்கு
  37. கண்ணீரை வரவழைத்த நெகிழ்ச்சியான பதிவு. (சிலநாள்களுக்கு முன் தான் படித்தேன்). பூக்களிலிருந்து சில புத்தகங்களுக்கு இந்தப் பதிவைக் கொடுக்கலாம். அனுபவங்களைப் பற்றிய அல்லது சொற்சித்திரங்களைப் பற்றிய புத்தகத்தில் இந்தப் பதிவை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. 1973-74 ஆம் ஆண்டுக்கு என்னை அழைத்துச் சென்று விட்டீர்.எனக்கு இது போன்ற் அனுபவம் உண்டு.ஆனால் ஏசுவடியான் இல்லை.என்னுடைய நண்பர்தான்.பதிவுக்கு நன்றி. காலிங்கராயர்.

    பதிலளிநீக்கு
  39. Words fail me; vision is blurred; palpitation has set in; the heart-throb is loud and deafening; the humid atmosphere spreads the minuscule water vapor from rim to rim; the hands tremble as if inflicted by Parkinson's disease - all because of your thoughts expressed in "words" in this article. If "words" can inflict such a damage - I hate you "words".
    S Thyagu (Sorry - comrade, I do not have the facility to post in Tamizh).

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!