சமீபத்திய பக்கங்கள்


என் பக்கம்

My Photo
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
View my complete profile

Search

Rss Posts

Rss Comments

Login

 

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

17 December 2009

எந்தவித நியதிகளும், விதிகளுமற்று மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. ‘எல்லா தர்மங்களும் எனக்குத் தெரியும், எல்லா நியாயங்களும் எனக்குத் தெரியும்’ என்று ஜனநாயகமும், சட்டமும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. எங்கள் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் வெறிபிடித்து நிற்கிறது.

முத்துவிஜயன் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து சென்ற பதிவில் தெரியப்படுத்தி இருந்தேன். அதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பேசுவதென 9.12.2009 அன்று சென்றிருந்தோம். பேச்சுவார்த்தைக்கு பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத் தலைவராயிருக்கும் முத்து விஜயன் வரக்கூடாது என்று நிர்வாகம் தடை விதித்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர் பேச்சுவார்த்தைக்கு வரும் தகுதியை இழந்து விட்டாராம். நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தோம். அங்கேயே காலவரையற்ற  உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தோழர்கள்.சோலைமாணிக்கமும், செல்வகுமார் திலகராஜும் உட்கார்ந்தனர்.  நிர்வாகம் காவல்துறையை அழைத்தது. தோழர்கள் இருவரையும் காவல்துறை 9.12.2009 இரவு 8 மணிக்கு கைது செய்து அழைத்துச் சென்றது. பிறகு விடுவிக்கப்பட்டனர்.

கொதிப்படைந்த அலுவலர்களும், ஊழியர்களும் Lighning Strike செய்ய, 10.12.2009 அன்று மொத்தமுள்ள 195 கிளைகளில்,  120 கிளைகள் செயலற்றுப் போயின.  அறுபது சதவீதத்திற்கும் மேல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். கால அவகாசம், திட்டமிட்ட ஆயுத்தங்கள் எதுவுமின்றி நடந்த இந்த போராட்டம் மகத்தான் வெற்றி பெற்றது.

தாங்கிக் கொள்ள முடியாத நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அலுவலர்களை சஸ்பெண்ட் செய்துகொண்டு இருக்கிறது. இந்த நிமிடம் வரை 14 தோழர்கள் சஸ்பெண்ட் ஆகியிருக்கின்றனர். மொத்தம் 39 பேரை சஸ்பெண்ட் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. சஸ்பென்சன் ஆர்டரில் எந்தக் காரணங்களும் முறையாகச் சொல்லப்படவில்லை.

டிசம்பர் மாதம் வங்கியின் முக்கால் வருடக் கணக்கு முடிக்கும் நேரம். இந்த நேரத்தில் மொத்தமுள்ள அலுவலர்களில் 10 சதவீதத்தினருக்கும் அதிகமானோரை சஸ்பெண்ட் செய்ய இருப்பது பெரும் கேலிக்கூத்து.

இதற்கிடையில், ஒரு சந்தோஷமான செய்தியுமுண்டு. தோழர்.முத்து விஜயன் அவர்களின் சஸ்பென்சன் ஆர்டரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்சில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். Stay order  கிடைத்திருக்கிறது.

இதற்கு முன்பு, ஒரு பத்திரிகையில் போராட்டம் குறித்து எழுதியதற்காக தோழர்கள் காமராஜும், அண்டோவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், கோர்ட் அதற்கு stay order கொடுத்திருந்தது. இப்போது தோழர் முத்துவிஜயன் விஷயத்திலும் அப்படியே. இதற்குப் பிறகும் தொடர்ந்து அலுவலர்களை எந்தக் முறையானக் காரணங்களுமின்றி சஸ்பெண்ட் செய்யும் இந்த நிர்வாகத்தை என்னவென்று சொல்வது?

ஊழியர்களையும், அலுவலர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும், பெண் ஊழியர்கள் மீது பரிவு காட்ட வேண்டும், வங்கியை வெறும் நகைக்கடன் வங்கியாக மாற்றிடக் கூடாது என்று தொடங்கிய போராட்டம் இன்று பெரும் அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.

வங்கியின் தலைமையகம் இருக்கும் விருதுநகரில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் திரட்டி மிகப்பெரும் பேரணியும், போராட்டங்களும் நடத்துவது என சங்கங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

வெயிலுக்கும் வெண்பனிக்கும்
மலைகள் அஞ்சுவதில்லை!

அணைக்க முடியாத நெருப்பு!

09 December 2009

 

பத்து நாளைக்கு முன்தான் ரொம்ப சந்தோஷமாய் பேசிக்கொண்டு இருந்தார். “ திருநெல்வேலிப் பேட்டையில் இருக்குற அந்த அருந்ததியர் சமூகத்து மக்கள் சொன்னாங்க... உங்க குடும்பமே நல்லயிருக்கணும்னு. இதுதான் மாது நாம் செய்ற வேலைக்கான சன்மானம். என்ன சொல்றீங்க...? வாங்கின சம்பளத்த வீட்டுக்குக் கொண்டு போக முடியாம வட்டிக்காரன்கிட்ட கொடுத்துட்டு, வயிறெரிந்து போயிருக்கும் அந்த பாவப்பட்ட மனுஷங்களுக்கு ஒரு ஸ்கீம் வொர்க் அவுட் பண்ணி லோன் கொடுத்தோம். இப்ப கந்து வட்டிக்காரன் கிட்ட இருந்து மீண்டு, ஒருவேளையோ, ரெண்டு வேளையோ நிம்மதியாச் சாப்பிடுறோம்னு சொல்றாங்க...” இப்படி அவருடைய பேச்சுக்களில் பல சம்பவங்கள், உணர்வு மிக்க தருணங்கள் இருக்கும். “எதோ தொழிலா நமது வேலையைச் செய்யக் கூடாது. அதில் ஒரு தவமும், சந்தோஷமும் இருக்க வேண்டும்” என்பார்.

முத்து விஜயன் அவர் பேர். ஐம்பதைத் தாண்டிய வயது. இருபது வருஷமாக அவரோடு பழக்கம். எங்கள் வங்கியில் உள்ள மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். எந்த வங்கிக்கிளையில் பணிபுரிந்தாலும் கொஞ்ச காலத்தில் அங்குள்ள மக்களின் பிரியத்திற்குரியவராகி விடுவார். “ஐயாயிரம் ருபாய்க்கோ, ஐம்பதாயிரம் ருபாய்க்கோ ஒரு நகைக்கடன் கொடுக்குறத விட, கம்மலை கையில் வைத்துக்கொண்டு  அவசரத்துக்கு ஒரு ஐநூறு ருபா லோன் கிடைக்காதா என்று வருகிறவர்களுக்கு மொதல்ல சர்வீஸ் பண்ணனும். ஐயாயிரத்துக்கோ, ஐம்பதாயிரத்துக்கோ லோன் கொடுக்க நிறைய பேங்க் இருக்கு. ஐநூறுக்கு கொடுக்க நாமதான இருக்கோம்” என்பார். இதுதான் அவரது தத்துவம். வாழ்வு பற்றிய சிறுகுறிப்பு.

முந்தாநாள் இவரைத்தான் எங்கள் வங்கி நிர்வாகம் திடுமென சஸ்பெண்ட் செய்துவிட்டது. பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் தலைவராயிருக்கும் அவரையும், அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை. சமீபமாக எங்கள் வங்கியில் நடந்து வரும் போராட்டங்களில் அவர் ஒரு முக்கியமான பாத்திரமாய் இருந்தார். இதுதான் நிர்வாகத்தின் கோபத்திற்கு காரணம். ‘தாங்கள் கொடுத்த கடன்களில் முறைகேடுகள் இருக்கின்றன.’ என்று மட்டும் சொல்லிவிட்டு, சஸ்பெண்ட் செய்துவிட்டது. என்ன லோன்கள், எப்படி முறைகேடுகள் என்ற எந்த விபரங்களும் இல்லை. அவரது 26 வருட கால, அப்பழுக்கற்ற வங்கிப் பணியை ஒரு காகிதத்தில் கொச்சைப்படுத்தவும், அவரை நிமிடத்தில் குப்பையைப் போல தூக்கி எறியவும் நிர்வாகம் துணிந்திருக்கிறது. போராட்டத்தை மழுங்கடிககவும், சிதைக்கவும் அவரை பலிகிடா ஆக்கியிருக்கிறது.

சிறிய புன்சிரிப்புடன் இரண்டு நாளாய் விருதுநகரில் சங்க அலுவலகத்தில் இப்போது நடமாடிக்கொண்டு இருக்கிறார். அடுத்து என்ன செய்வது, போராட்டங்களை எப்படி தீவீரப்படுத்துவது என திட்டமிடல்களும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன. அலைச்சல்களும், கோபங்களுமாய் நேரங்கள் விரைந்து கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில் வேகமும் வேண்டியிருக்கிறது. நிதானமும் வேண்டியிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்ட மனநிலைகள் விளைவுகளை யோசிப்பதில்லை.

நேற்று இரவில் தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த கமிட்டி மெம்பர்கள் எல்லோரும் அவரவர் ஊர்களுக்குச் சென்ற பின் மிகச்சிலரே மிஞ்சியிருந்தோம். விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குப் பின்னால் சங்கக் கட்டிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நின்றிருந்தது.  காட்டுப்புதர் போல அடர்ந்து கிடக்கும் செடிகொடிகள் அந்தக் கட்டிடத்தைத் தின்றுவிடும் மூர்க்கத்தோடு சுற்றி வளைத்துக் கிடந்தன. வாசல் படிகளில் உட்கார்ந்து நான், காமராஜ், முத்து விஜயன், சோலைமாணிக்கம், செல்வகுமார் திலகராஜ், அருண், அண்டோ பேசிக்கொண்டு இருந்தோம். இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்திருக்கும் முத்து விஜயன் ஆங்கிலக் கவிதைகளையும், திருக்குறளின் அர்த்தங்களையும் வியந்து வியந்து சொல்லிக் கொண்டே இருந்தார். பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் படித்து லயித்துக் கிடந்த அவரது அனுபவம்  எனக்கு புதியதாகவும், நெருக்கமானதாகவும் இருந்தது. ஊர், வயக்காடு, அரிசி குத்திச் சாப்பிட்ட சின்ன வயசுக் காலங்கள் என விரிந்த உரையாடல்களால் நிரம்பிக்கொண்டு இருந்தது இரவு. எங்கள் முன் ஒரு சித்தனைப் போல  உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தார் முத்து விஜயன். தூக்கத்தில் ஒவ்வொருவராய்ச் சரிய, அவர் எப்போதையும் விட உற்சாகமாயிருந்தார். ”சரி,  படுப்போம். காலையில் வேலைகள் இருக்கின்றன’ என்று அவரே முன்மொழிந்தார். படுத்துக் கிடந்தே அவர் பேசிக்கொண்டு இருந்ததாக ஞாபகம்.

கண்விழித்த போது, “இல்லம்மா.. அப்பா ரெண்டு நாளில் வந்துருவேன்..” என போனில் பேசிக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்து ‘வணக்கம் மாது” என்றார்.  இன்றைக்கான ஆடைகள் இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அவசரம் அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அங்கிருந்து சாத்தூர் 24 கிலோ மீட்டர் இருக்கும். காமராஜ் பின்னால் உட்கார்ந்திருந்தான்.

காலை ஏழு மணிக்கும் பனியும், குளிரும் இருந்தன. பரந்து கிடந்த நாற்கரச்சாலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த பெரிய கண்டெய்னர்களை தாண்டி போய்க்கொண்டு இருந்தோம். ஓரங்களில் உட்கார்ந்திருந்த மைனாக்கள் சடசடவென மொத்தமாய் பறந்தன. கொஞ்சம் வீடுகளாய் தூரத்தில் தெரிந்தன. எதோ ஒரு சின்ன ஊராய் இருக்க வேண்டும். அதிலிருந்து மண்பாதை ஒன்று நீண்டு வந்து நாற்கரச்சாலையில் வந்து சேர்ந்துகொண்டது. அதன் முனையில் சில பையன்கள் யூனிபார்மில் புத்தகக் கட்டுக்களோடு நின்றிருந்தார்கள். ஸ்கூல் வேனுக்காக காத்திருக்க வேண்டும்.

இதையும் விட சாதாரண கிராமத்தில் இருந்து வந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முத்து விஜயன் பல கிலோ மீட்டர் நடந்தே சென்று படித்திருக்கிறார். அந்தச் சின்ன வயதில் அவருக்குள் இருந்த நெருப்பை நேற்று இரவில் பார்க்க முடிந்தது. இப்போதும் உணர முடிகிறது. போயும் போயும் நிர்வாகத்தின் கேடுகெட்ட காகிதமா, அதை அணைத்து விடும்! ஹா..ஹா!  இன்னொரு நாள் உற்சாகமாய் புலர்ந்துவிட்டது.

முடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை

04 December 2009

 

கண்ணெல்லாம் எரியுதம்மா
கண்ணெல்லாம் எரியுதம்மா

உறக்கம் பிடிக்காமல்
புரண்ட சிறுவன்
இப்போது தாயை எழுப்பாமல்
தானாகத் தூங்குகிறான்

தூங்க மறுத்துத்
தூளியை உதைத்துத்
துடித்துக் கதறிய
பச்சிளம் குழந்தை
இப்போது நிம்மதியாகத் தூங்குகிறது

அந்தப் பாழிரவில்
நகரத்தின் தெருக்களெங்கும்
காலன் புகுந்து சென்றான்
முகமூடி கொள்ளைக்காரனைப் போல

ஊரைப் பிளப்பது போல
ஓலம் கிளம்பியது
தேவாலயத்து மணிகள்
விரிசல்கள் கண்டன

விதேசி மூலதனத்தின்
இரசாயனக் கிரியையால்
பால் வடியும் நிலவெல்லாம்
சீழ் வடிந்தது
போபால் தெருக்களெங்கும்
பிணங்கள் பிசுபிசுத்தன

இத்தனைக்கும் அசையாது
கால் சுருட்டி நிற்கிற
கருப்புச் சிலந்தியைப் போல்
அந்தத் தொழிற்சாலை
நகரத்தின் ஒரு புறத்தில்........

  - பிரளயன் (சந்தேகி கவிதைத் தொகுப்பு - ஜூன் 1990)

கருப்புச் சிலந்தியைப் போல் நின்ற அந்தத் தொழிற்சாலை இன்றும் போபால் நகரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. யூனியன் கார்பைடு இரசாயனத் தொழிற்சாலை. டிசம்பர் 2, 1984 நள்ளிரவைக் கடந்து 3ம் தேதியின் குளிர்கால விடியலுக்குச் சிலமணி நேரத்துக்கு முந்தைய அந்த நேரத்தில் நடந்த மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற விஷவாயுக் கசிவு பயங்கரம், உறங்கிக் கிடந்த அப்பாவி உயிர்களை நொடி நேரத்தில் ஆயிரக்கணக்கில் விழுங்கிவிட்டது. லட்சக் கணக்கானோரைச் செயலிழக்கச் செய்துவிட்டது. கால்நடைகளும், பிற ஜீவராசிகளும் கூடத் தப்பவில்லை.

அன்றோடு முடிந்துவிடவுமில்லை - உயிர்களுக்கு எதிரான அந்தத் தாக்குதல்.  உடனடியாக இறந்த சில ஆயிரம் பேர் 'கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைக்கும் அளவிற்குக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் உயிரிருந்தாலும் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள்.  இந்த டிசம்பர் 3ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிடப் போகிற அந்தக் கொடிய விபத்தினால் (அது விபத்தா, இரசாயனப் போர் ஆயுதம் ஒன்றின் பரிசோதனையா என்ற கேள்விகள் அப்போதிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க) பாதிக்கப்பட்டோருக்கான முழு நிவாரணம் இன்னமும் அவர்களை எட்டாதிருப்பதும், அராஜக நிகழ்வுக்குப் பொறுப்பான பெரும்புள்யூ௨ள் இன்னமும் தண்டிக்கப்படாததுமான உண்மைதான் நம்மைச் சுடுவது.

இந்தியாவின் ஹிரோசிமாவாக வருணிக்கத்தக்க அளவிற்கு, மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபால் இந்த இரசாயன வாயுவிபத்திற்கு அடுத்த சில மணிநேரங்களிலிருந்து பரிதாபமான நிலைக்கு மாற்றப்பட்டது.  போபால் நகரத்தின் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதில்  இருந்த 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பில் பதிவான விவரங்களே சொல்கின்றன.  மாநகரத்தின் ஏழை மக்கள் வடக்கே வசித்துவந்த ஒதுக்குப்புறப் பகுதியில்தான் நிறுவப்பட்டிருந்த இந்த இராட்சத தொழிற்சாலை.  அங்கே என்ன தயாரிக்கப்படுகிறது, என்ன அபாயமான சூழல் அது, கொஞ்சம் அசந்தாலும் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எதுவும் அறிந்திராத ஏழை மக்கள்.  போபால் நகரில் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் வெறும் 34 சதவீதமே. இதுவும் பெண்களுக்கு 19 சதவீதமாக இருந்தது.  வெளியிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேலை தேடி வந்த மக்களும் சேர்ந்து வாழ்ந்த அந்தப் பூமியின் மேற்பரப்பில் படிந்த இரத்தக் கறையும், குவிந்த மண்டையோடுகளும் என்றும் வேதனைக்குரியவை.

பூச்சிக்கொல்லி தயாரிக்க நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் தொட்டிகளில் ஒன்றிலிருந்து கசிந்த விஷவாயுவின் அளவு 40 டன்கள் என்று சொல்லப்படுகிறது.   ஏற்கெனவே ஆலைக்குள் 1981ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்திருந்த போதிலும், அதற்குப் பின்னரும் வெவ்வேறு விதமான சிறு பிரச்சனைகளும், விபத்துகளும் நடைபெற்றிருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த பாதுகாப்பு அம்சங்களின் தரமும் தாழ்த்தப்பட்டிருந்தது. விஷ வாயு கசிவின் நெடியை மூக்கு நுகர்ந்த அடுத்த நொடியே அது நுரையீரலை எட்டித் தனது கைவரிசையைக் காட்டிவிடும் என்றிருக்க, சிறிய ஈரத்துணியால் மூக்கை மூடிக்கொண்டு அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டே ஓடியிருந்தால் ஒருவேளை அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படை அறிவியல் ஆலோசனை கூட அறிந்திராத மக்கள் பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.  அதுவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நள்ளிரவைக் கடந்த வேதனை மிக்க நேரத்தில்....

நிலைமையின் தீவிரமறிந்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்ததும், மத்திய அரசு தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் அவர் உடனே கைது செய்யப்பட்டார்.  ஆனால் அது வெறும் நாடகம் என்பது, உடனடியாக அவருக்கு எதிர்ப்பின்றி ஜாமீன் வழங்கப்பட்டதும், அடுத்த நொடியே தனி விமானமொன்றில் அவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடி ஒளிந்ததும், பின்னர் பல்லாண்டுகள் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒருபோதும் அவர் ஆஜர் ஆகாமல் நழுவிக் கொண்டிருந்ததும், அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர பிரத்தியேக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றமே வழங்கிய சிறப்பு உத்தரவை அமலாக்க இந்தியப் புலனாய்வுத் துறையோ, மத்திய அரசோ இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதுமான பல நிகழ்வுகளிலிருந்து வெளிப்பட்டது.  ஆண்டர்சன் மட்டுமல்ல, இவ்வளவு படுபயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்று ஒற்றை ஆள் கூட அடையாளம் காணப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகும்.

அமெரிக்காவின் பணவெறி பிடித்த வழக்கறிஞர்கள் பலர் போபால் நகரத்திற்கு வந்திறங்கி அப்பாவி மக்களுக்கு நிவாரணம பெற்றுத்தரும் ஆசைகாட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞரான நானி பால்கிவாலாவைத் தனக்குச் சாதகமாக வாதாட நியமித்திருந்தது யூனியன் கார்பைடு.  மிக உயர்ந்த மனிதர்களாகச் சமூகத்தில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இத்தகைய பல நபர்களுக்கு, தேச பக்தியைவிடவும் தொழில்பக்தியும், காசு பக்தியுமே விஞ்சி நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமானது.  முகம் தெரியாத, பெயர் அறியப்படாத ஏழை எளிய மக்களின் உயிரும், உடல் ஊனமும் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசப்படக் கூடாதது, வழக்குக்கு அங்கு இடமில்லை என்று இந்திய அறிவுஜீவியையே பேச வைத்தது அந்நிய கம்பெனியின் பணபலம்.

அதுமட்டுமல்ல, லாபவெறியும், இரத்தவெறியுமிக்க இந்த நிறுவனத்தின் சார்பில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட பெரும்பொய்கள் சாதாரணமானவை அல்ல.  விஷவாயு கசிந்தது சீக்கிய தீவிரவாதிகளின் வேலை (அக்டோபர் 1984 இறுதியில் தான் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பதைப் பயன்படுத்தி !) என்றது.  எங்கள் நிறுவனமே அல்ல, அது இந்தியக் கம்பெனி, இந்தியத் தொழிலாளர்களால் மோசமாகக் கட்டப்பட்டிருந்தது என்றது. சட்டப்படியாக, பன்னாட்டு நிறுவனம் என்ற ஒரு வரையறையே எங்கும் செய்யப்படவில்லை என்று கூசாமல் சொல்லுமளவு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்ற அதன் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.

ஆனாலுமென்ன, 3000 கோடி டாலர் கேட்டதற்கு வெறும் 47 கோடி டாலர் நஷ்ட ஈடுதான் விதிக்கப்பட்டது.  இதன் நடுவே, நயவஞ்சகன் ஆண்டர்சன் 1986ல் பணி ஓய்வு பெற்றார்.  நிறுவனத்தை டவ் கெமிகல்ஸ் என்ற வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்.  டவ் கெமிகல்ஸ் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்று சாதிக்க ஆரம்பித்துவிட்டது.  இதற்குள் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன.  உயிர்பிழைத்து பாதிப்புற்றிருப்போர் போராட்டக் குழுக்கள், முக்கியமாக பெண்கள் போராட்டக் குழு உதயமாயின.  இந்த அமைப்புகளின் போர்க்குரலும், தீர்மானமான போராட்டமும் இதுவரை தேசம் சந்திக்காதது.  எங்கே சென்றாலும், அநீதி இழைத்தவனைத் துரத்திப் பிடிப்போம் என்று அமெரிக்காவரை சென்ற இந்தக் குழுவின் தலைவியர் பெரிய கல்வியறிவோ, செல்வமோ படைத்தவர்களே அல்லர்.

இதில் முக்கியமாக அறியப்படும் இரட்டையர், ரஷிதா பீ - சம்பக் தேவி சுக்லா என்கிற இஸ்லாமிய-இந்து பெண்மணிகளாவர்.  மத பேதங்களை மீறி இலட்சிய வெறியோடு பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை.  டவ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலில் தர்ணா நடத்த அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றவர்கள்.  'துடைப்பக்கட்டையால் அடிப்போம் வாருங்கள்' (ஜாடு சே மாரோ) என்ற இயக்கத்தின் பெயரால், போபாலில் துவங்கி புது தில்லி வரை எத்தனையோ கிராமங்களுக்குச் சென்று சாதாரண மக்களிடமிருந்து துடைப்பங்களைத் திரட்டிக் கொண்டு போய்ப் போராட்டம் நடத்திவந்த இவர்களுக்கு 2004ம் ஆண்டின் கோல்டுமேன் விருது (1990ல் கோல்டுமேன் தம்பதியரால் சுற்றுச்சூழல் இயக்கவீரர்களுக்காக நிறுவப்பட்ட விருது) வழங்கப்பட்டது.

ஆண்டர்சன் மற்றும் பொறுப்பான அதிகாரிகளை இந்தியாவிற்குக் கொணர்ந்து கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும், வாயுக்கசிவின் முழு உண்மைகள், பாதிப்பின் விளைவுகள் மக்களது தகவலுக்கு வெளியிடப்படவேண்டும், தொழிற்சாலை அதன் நச்சுக் கழிவுகளோடு உடனடியாக அகற்றப்படவேண்டும், பாதிப்புற்றோர் வாழ்வாதாரங்களுக்கு முழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் போபால் விஷவாயுவின் பாதிப்பால் அல்லலுறுவோர் எழுப்பும் குரலாகும்.  பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும், வேறு பல நச்சு வேதியல் பொருள்களும் மண்ணிலும், உடலிலும், ஏன் - தாய்ப்பாலிலும் கூடக் கலந்துவிட்டிருப்பதன் பாதிப்புகள் சமூக ரீதியாகவே தலைமுறைகளைத் தாக்கிக் கொண்டிருக்கிற பயங்கரம்தான் போபால் நிகழ்வு.  தொழிலுக்கும், லாபத்திற்கும் வேட்டைக்காடாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்போ, தார்மீக மதிப்போ, அரசியல் ரீதியான கடிவாளமோ கிடையாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அந்த பயங்கரம்.

'பொன்னார் வளநகரில் வேதாளம் சேர்ந்தது, வெள்ளெருக்கு பூத்தது, பாதாள மூலி படர்ந்தது, உழுமண்ணில், குடிநீரில், சுவாசத்தில், கர்ப்பத்தில் அனைத்திலுமே பாஷாணம், பாஷாணம்.....'. என்று அப்பாவி மக்களைக் கதறடித்துவிட்ட போபால் விஷவாயு கசிவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு, இன்றைய உலகமய-தாராளமய சூழலில் எந்த எச்சரிக்கையும் கொள்ளாதிருக்கிற ஆட்சியாளர்களைப் பற்றிய கோபத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அஞ்சாதது என்ற விழிப்புணர்வையும் புதுப்பிக்கிறது

(கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன்)

பூக்களிலிருந்து நான்கு புத்தகங்கள்!

03 December 2009

‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ பணி முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. புத்தகங்களின் தலைப்பு, அவை பற்றிய குறிப்புக்களோடு அட்டைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.

முதன்முதலில் இதுகுறித்து பேசும்போது, வம்சி பதிப்பகம் சார்பாக எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் சொன்ன ஒரே விஷயம், ‘எழுத்துக்கள் இலக்கியத் தரமாக இருக்க வேண்டும்’ என்பதுதான். அறிவிப்பு வெளியானபோது, சினிமா, பயணங்கள், விவாதங்கள் குறித்து சேகரிப்பது என்றெல்லாம் சொல்லப்பட்டு இருந்தது. வந்திருந்த சுட்டிகளில்  சினிமா குறித்தும் இருந்தன. ஆனால் அவை புத்தகங்களாகும் நிலையான தன்மை கொண்டிருக்கவில்லை. உலக சினிமா குறித்து தீவீரமாக எழுதப்பட்ட முக்கியப் பதிவுகள் பல இருக்கின்றன. அவற்றை பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளலாமே என்றார் பவா. இப்போதைக்கு, சென்னை புத்தகத் திருவிழாவுக்கு, அனுபவங்கள், கவிதை, சிறுகதை என மூன்று தொகுப்புகள் கொண்டு வருவது என முடிவானது. இவைகளோடு வலைப்பக்கங்களில் நான் எழுதிய சொற்சித்திரங்களின் தொகுப்பும் வருகிறது.

1.பெருவெளிச் சலனங்கள்
(அனுபவங்களின் தொகுப்பு)

தாளிடப்படாத அறைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் குரல்கள் காற்று வெளியில் தெறிக்கின்றன. விரியும் வளையங்களின் அடுக்குகளில் அவரவர் வாழ்வின் கணங்கள் மிதக்கின்றன. அன்பும், காதலும், சோகமும் தீராமல் கரைகின்றன. பெருவெளியின் சலனங்கள் மனிதருக்கு எளிதில் புலப்படுவதில்லை. உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தால் அவரவர் ரேகைகளே தெரிகின்றன.

2.கிளிஞ்சல்கள் பறக்கின்றன
(கவிதைத் தொகுதி)

கட்ற்கரைப் பூக்களாய் கிளிஞ்சல்கள் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் ஒடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும், அவைகள் பறந்துவிடக் கூடும். கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.

3.மரப்பாச்சியின் சில ஆடைகள்
(சிறுகதைத் தொகுப்பு)

குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.

4.குருவிகள் பறந்து விட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது
(நான் எழுதிய சொற்சித்திரங்கள்)

எதிரும் புதிருமாக அலைக்கழிக்கிறது. சரி, தவறு என்பதில் மூளை கசங்குகிறது. திசைகளில் சிக்கித் தவித்து தடுமாறுகிறது. இழப்பதைக் காட்டிலும் பெறுவதில் மோகம் முட்டுகிறது. இரையைத் தேடி மூச்சு இழைக்கிறது. வன்மம் குருதியிலும், கண்களிலும் தேங்குகிறது. இந்தச் சின்னப் பறவைகளுக்கு மட்டும் நாட்கள் எளிமையாகவும், இயல்பானதாகவும் வந்து கொண்டு இருக்கின்றன.

நண்பர்களே!

வந்திருந்த சுட்டிகளிலிருந்து புத்தகங்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணி முடிந்து விட்டது. முக்கியப் பதிவர்களின் சுட்டிகள் வராததால் அவர்களிடம் போன் மூலமாகவும், மெயில் மூலமாகவும் அனுமதி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை நல்ல எழுத்துக்களை அடையாளம் காணவேண்டும் என நினைக்கிறேன். இதில் நான் தோற்றுப் போகக் கூடும். ஆனால் முயற்சி இருக்கும். அது தொடரம், மேலும் சில புத்தகங்களாக....

ஏற்கனவே இங்கு நான் எங்கள் வங்கியில் நிலவும் அசாதாரணச் சூழலை தெரிவித்து இருந்தேன். நிர்வாகம் வெறி பிடித்து நிற்கிறது. charge sheetகளும், show-cause noticeகளும் குவிந்து கொண்டு இருக்கின்றன. பழிவாங்கும் transfers போடப்படுகின்றன. நாங்கள் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறோம். இன்று நான்காவது நாள். இதற்கிடையில்தான் ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ பணியும் நடந்து கொண்டு இருக்கிறது. சங்க அலுவலகத்திலேயே தங்கி இருக்கிறோம். நடு இரவிலோ, விடியற்காலையிலோ நேரம் வாய்க்கிறது. “இப்போது இருக்கும் நிலையில், இந்த வேலை எதுக்கு” என சக தொழிற்சங்க நிர்வாகிகள் என்னை ஒரு விரோதத்துடனே பார்க்கிறார்கள். பவா செல்லத்துரையோ டிசம்பர் 10ம் தேதிக்குள் அச்சுக்கு போக வேண்டும் என்கிறார்.

இன்னும் பதிவுகளை வரிசைப்படுத்த வேண்டும், எழுத்துப் பிழை பார்க்க வேண்டும். நேரம் கொல்லுகிறது. பார்ப்போம்.

சமச்சீர் கல்வி - ஒரு உரத்த சிந்தனை!

27 November 2009

மச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டங்களுக்கு இடையே உள்ள மேடுபள்ளங்களை நிரவுவது என்ற முறையில் கொச்சைப் படுத்திவிடக்கூடாது. சமூக இடைவெளி களால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்கமாகும். சாதி, வர்க்கம், வட்டாரம் போன்ற வற்றாலான சமூக வேறுபாடுகள், சமூக இடைவெளிகளுக்கு சாதகமான கல்விமுறை, பாடத்திட்டம் கைவிடப்படவேண்டும். மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும். கல்வி துவங்கும்போது

மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும்.

மாணவர்கள் சமமாக, சமத்துவமாக இல்லை. குடும்பப் பின்னணி, வறுமை, சாதி, வாழ்விடம் கல்விக்கான வசதி வாய்ப்புகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, திறமை, அக்கறை, சமூகப் பொறுப்பு, பணிப்பொறுப்பு போன்றவற்றால் சமத்துவமற்ற மாணவர்களாகத்தான் கல்வியின் துவக்கம் இருக்கிறது. நமது கவலையெல்லாம் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்ற வேளையில், இம்மாணவர்களுக்கிடையே கல்வித்தரம், திறன், வாய்ப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு ஆற்றல் ஆகியவற்றில் நியாயமான சமத்துவத்தை நடைமுறையில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையைத்தான் சமச்சீர்க்கல்வி என்பதில் எதிர்பார்க்கிறோம்.

கட்டுரையாளர்
அ.கருணானந்தன், வரலாற்றுத்துறைத் தலைவர் (ஓய்வு), விவேகனந்தர் கல்லூரி, சென்னை

ஒரேவிதமான பாடத்திட்டம் என்பது மட்டுமே இதற்குப் பயன்படுகிறதா என்பதுதான் நமது அக்கறையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் வெவ்வேறு விதமான கல்வி அமைப்புகளை முற்றிலுமாக மாற்றிவிட முடியும் என நம்ப முடியாது. இன்றுள்ள பல்வேறு பள்ளிக்கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளிகளை அதிகப்படுத்துவதாக அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம். அதனால்தான் சமூகப் பொறுப்புடையவர்கள், கல்வியாளர்கள், சமூக நீதி, சமூக ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுப்பாடத்திட்டம் ஒன்றின் மூலமாகவே சமச்சீர் கல்வியை கொண்டு வந்துவிட முடியும் என்ற நிலையிலான அணுகு முறை நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். equitable standard education ஏன் இன்று இல்லை? பாடத்திட்டத்தினால் மட்டும் தானா? சமத்துவமற்ற நிலையிலுள்ள மழ லையர், பொதுக்கல்வியில் நுழைந்து 10வது வரை படித்து வெளிவரும்போது கல்வியிலும், கல்வியினால் பெறும் அறிவு - விழிப்புணர்வு -ஆற்றல்- திறன்- பண்பு ஆகியவற்றிலும் சமநிலையை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். சமூக, சமய, வர்க்க இடைவெளி கள் பொதுக்கல்வியின் மூலமாக 10 அல்லது 12 ஆண்டுகளில் அகற்றப்பட்டிருக்க வேண்டும். நமது அரசின் நோக்கங்கள், திட்டங்கள் - முன்னுரிமைகள் - நிதி ஒதுக்கீடுகள் - அதிகாரிகள் -ஆசிரியர்கள் போன்றோரது அக்கறை, ஈடுபாடு ஆகியவையும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.

சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று, பின்தங்கிய சூழலிலிருந்து வருகின்ற மழலையருக்கும், சிறுவருக்கும் அதிக ஆசிரியர், அதிக கவனம், ஆமாம் சமகவனமல்ல, செலுத்தப்படக்கூடிய அளவிற்கு பொதுக்கல்வி அமைய வேண்டும். இன்றும் தொடருகின்ற ஓராசிரியர், ஈராசிரியர், மூவாசிரியர் பள்ளிகள், சமச்சீர்க் கல்வி ஏற்றுக்கொண்டுவிட்ட நமது மாநிலத்தின் அவமானச் சின்னங்களாகும்.

சமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது.

குறைந்தபட்சம் மாநிலம் முழுவதும் துவக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பதை இந்தக் கல்வியாண்டிற்குள் உறுதி செய்யாவிட்டால், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அரசின் சமச்சீர் கல்வித்திட்டம், ஒரு கண்துடைப்பாகவும், மோசடியாகவும் மாறிவிடக்கூடும். சமச்சீர்கல்வி என்று வருகின்றபோது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமே போதுமானதாகாது. நலிந்த பிரிவு மாணவர்கள்-மழலைச் சிறுவர்கள் பயிலும் கிராமப்புற, பின்தங்கிய பகுதிப்பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் முறையாக நியமித்திட வேண்டும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவேண்டும்.

சமச்சீர் கல்வியின் துவக்கம், பாடத்திட்டத்திலிருந்து துவங்குவது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சமச்சீர் கல்விக்கான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்காமல், பொதுப்பாடத்திட்டம் என்பது வருத்தத்தைத் தருகிறது. கல்வித்திட்டம் (curriculam) என்பதை வகுத்த பின்னர் தான் அதன் ஒரு பகுதியான பாடத்திட்டம் (syllabus) பற்றி விவாதம் துவங்கியிருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டம் என்பதாக சுருக்கிவிட்ட, கொச்சைப்படுத்திவிட்ட போக்கு, இந்திய சட்ட அமைப்பில் வழிகாட்டு நெறிகளில் வற்புறுத்தப்பட்ட ஒரு நியாயமான, முற்போக்கான சமத்துவ சமுதாய உருவாக்கத்திற்கு (egalitarian social order) எதிரான சதியாகவே ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.

வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது.

வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் - ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்? இந்த இடைவெளியை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வி என்பதை எவ்வாறு அடையமுடியும்?

கல்வித்திட்டம் என்பது மழலையர் - சிறுவர்களின் வயது, வேறுபட்ட குடும்ப, சமூகப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கூறுகளை பொதுக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி, விளையாட்டுகள், உடலுழைப்பு, ஒழுக்கக்கல்வி, திறன் வளர்த்தல் போன்ற பல்வேறு கூறுகளை எந்தெந்த அளவில் புகுத்துவது என்பதை அந்தக்கல்வித்திட்டம் தீர்மானிக்க வேண்டும். ஓவியம், இசை, நடனம், கைவினைத்திறன் போன்றவை கல்வித்திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். வெவ்வேறு விதமான கூறுகளுக்கு வெவ்வேறு தகுதிகளைக் கொண்ட பயிற்சி ஆசிரியர்களையும், வட்டாரங்களுக்கு ஏற்றாற்போல் ஆசிரியர்: மாணவர் விகிதத்தையும் கல்வித் திட்டம் குறிப்பிடவேண்டும். குறைந்தபட்ச கல்விச்சாதனத் தேவைகளையும் கல்வித்திட்டம் வரையறுக்க வேண்டும். பொதுப்பள்ளிக் கல்வி எளிமையாக, இனிமையாக, உற்சாகமூட்டக்கூடியதாக, மழலையர் சிறுவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதற்கு இந்த சமச்சீர்க் கல்விக்கான கல்வி திட்டத்தினை (curriculam for equatable standard education) கல்வியாளர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும்.

கல்வி என்பது வலிமைக்கான கருவி என்று கூறுவது இன்றைய மரபு. ஆனால், காரல் மார்க்ஸின் கருத்துப்படி, கல்வி என்பது வலிமையுள்ளவர்களின் அதிகாரப்பீடங்களின் கருவியாகவே இருந்து வந்துள்ளது. மதவாதிகள் அதிகாரத்திலுள்ளபோது மதவாத அரசு (Theocracy) நடைபெறும் போது மதக்கல்வியினைத் திணித்து, அதன் மூலமாக தங்களை நியாயப்படுத்தவும், தெய்வீகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் முனைவர்; இனவெறி அரசுகளோ (ஹிட்லரின் நாசி அரசு) இனவெறிக்கல்வியைக் கருவியாக பயன்படுத்துவர், அரசவம்சங்களோ தங்களது வம்சங்களை இந்திரகுலம், சந்திரகுலம், சூரிய குலம், அக்கினி குலம், தேவகுலம் என்றெல்லாம் புனிதப்படுத்தக் கல்வி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.

ஆங்கில காலனியாதிக்கத்தின்போது, கல்வித்திட்டமும், பாடத்திட்டமும், ஆங்கிலேய நாகரிகத்தின் பெருமையையும், ஆங்கில ஆட்சியின் நியாயத்தையும் தேவையையும் வலியுறுத்தவே கருவிகளாகப் பயன் பட்டன.

அரசாணையும், அரசனது எதேச்சதிகாரத்தையும் புனிதப்படுத்தும் விதுர நீதி, தண்ட நீதி, அர்த்த சாஸ்திரம் போன்றவையெல்லாம் இவ்வாறுதான் பாடத்திட்டங்களில் கருவிகளாக்கப்பட்டன. இதே அடிப்படையில்தான் உழைப்பே இல்லாமல், தர்மங்களின் பெயரால், உழைக்கும் மக்களைச் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் முத்திரையிட்டு சுரண்டி வந்த தர்மராஜ்யங்களின் கருவியாகத்தான் மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளும், பிற தர்மசாத்திரங்களும் கல்வித்திட்டத்தில் இடம்பெற்றன.

முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.

இன்று ஜனநாயக யுகம்; மக்களாட்சியில் மக்களது அதிகாரம் என்றால், மக்களுக்கு நியாயமும் நீதியும் தருகின்ற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் களைகின்ற, சாதி-வர்க்கபேதங்களால் பாதிக்கப்படாத, முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.

எனவே இந்தச்சூழலில் ஆங்கிலம் வலிமைக்கான கருவி (English for empowerment) என்ற வாசகம் சில குழப்பங்களை, சில அச்சங்களைத் தோற்றுவிப்பதாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் வேண்டாம் என்ற கோரிக்கையும், ஆங்கிலமே பாடமொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரண்டுவிதமான முரண்பட்ட தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கைகளாகும்.

சமச்சீர் கல்வி என்ற அடிப்படையில் மொழிப்பிரச்சனையை அணுகும்போது ஓர் உண்மையை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஜப்பான், சீனா போன்றில்லாமல் இந்தியா ஒரு கூட்டாட்சி. அதுவும், பல்வேறு மொழி, பண்பாட்டு இனங்களைக் கொண்ட கூட்டாட்சி. அமெரிக்கக் கூட்டாட்சியிலும், ஆஸ்திரேலியக் கூட்டாட்சியிலும், ஆங்கிலம் மட்டும்தான் ஒரே மொழி. ஜெர்மானியக் குடியரசில் ஜெர்மானிய மொழி மட்டுமே. சோவியத் யூனியன் வாழ்ந்திருந்தபோது வட்டாரமொழிகளுடன் ரஷ்ய மொழியும், சுவிட்சர்லாந்தில் (மிகச்சிறிய ஒரு கூட்டாட்சி) மூன்று ஐரோப்பிய மொழிகள்.

வட்டார மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.

இத்தகைய தனித்தன்மை கொண்ட கூட்டாட்சியில் மையக்கல்வி அமைப்பு களை முற்றிலுமாக மாற்றிவிட முடியுமென்றோ, குறைத்துவிட முடியுமென்றோ தோன்றவில்லை. எனவே வட்டார மொழியுடன் வேறு ஒரு தொடர்பு மொழியின் தேவையை நாம் மறுதலித்துவிட்டால், சிபிஎஸ்இ பிரிவில் உயர்சாதியினர், மாநிலக் கல்வி அமைப்பினர், கீழ் சாதியினர் என்று ஒரு புதிய வர்ணாசிரமம் தோன்ற நாம் காரணமாகிவிடுவோம்.

வட்டார மொழிக்கல்வியை வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை சரிவரக் கையாளுகின்ற திறனை 10 வது வகுப்பு முடிவதற்குள் மாணவருக்கு உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. இப்போதும் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக கட்டாயப் பாடமாக இளநிலை பட்டப்படிப்பு வரை தொடர்கிறது. ஆனாலும் ஆங்கிலமொழித் திறன் பொதுப்பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இல்லாமல் போவதேன்? திட்டமிடுதலில் குறைபாடுள்ளதா? நடைமுறைப்படுத்துவதில் ஈடுபாடின்மை, அக்கறையின்மை, நாணயமின்மை உள்ளதா? ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, மழலையர் பள்ளியிலிருந்தோ ஆங்கில மொழிப்பாடமோ, ஆங்கிலவழிப் பாடமோ என்பது பொறுப்பற்ற பிதற்றலாகவே படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் செய்திட சில தனியார் அமைப்புகளால் முடியுமென்றால், ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் ஆங்கில மொழிப்பாடத்தின் மூலமாக ஆங்கில மொழித்திறனை உறுதி செய்ய முடியாதா? இதே நிலைதான் தாய்மொழி அல்லது வட்டார மொழித்திறன் தொடர்பானவற்றிலும் இருக்கிறது. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக்காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும்.

சமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்தக் கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச்சியோ அல்ல. ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள(?) மனப் பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை, ஜனநாயக சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது. இது பாச உணர்ச்சியுடன், என்னைப்போல என் சகோதர மக்களுக்கும் வாய்ப்பும், வளர்ச்சியும் செழிப்பும் வேண்டும்; எனவும், எனது சக சமூக உறுப்பினர்களும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு (mindset) இதில் தேவை. மனிதநேயம் மட்டுமல்ல, மனிதநியாயமும் இதில் நம்மை வழிநடத்த வேண்டும். அந்த உளப்பாங்கும், அணுகுமுறையும்தான் உண்மையான நாட்டுப்பற்றை வெளியிடுவதாகவும், நடைமுறைப்படுத்துவதாகவும் அமையும்.

நன்றி: தீக்கதிர்

மாதவராஜ் பக்கங்கள் 17

25 November 2009

பூக்களிலிருந்து புத்தகங்களுக்கு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சுட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டு மெயிலுக்கு வந்திருந்தன. அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முக்கியப் பதிவர்கள் பலரது சுட்டிகள் வரவில்லை.

ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழித்து படித்து, ஓரளவுக்கு பதிவுகளை அறிந்து வைத்திருந்தேன். வம்சி புக்ஸிலிருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசினார். சினிமா குறித்து வந்த விமர்சனங்களையும், செய்திகளையும் புத்தகங்களாக்குவதில் சிரமங்கள் இருப்பதாகச் சொன்னார். அரசியல் கட்டுரைகளைத் தவிர்த்து இலக்கிய நயம் கொண்டதாய் இருந்தால் நலம் என்றார். அனுபவங்கள், சமூகப்பார்வை கொண்ட கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என பிரித்துக் கொள்ளலாம் என்றார். அனுபவங்களும், கவிதைகளும்தாம் அற்புதமாக வலைப்பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன. சிறுகதைகள் அதிக அளவில் தேறுமா எனத் தெரியவில்லை. பார்ப்போம்.  இந்த ஒரு வாரமாய் “பூக்களிலிருந்து புத்தகப் பணியும்’ நின்று போயிருக்கிறது. நேரமில்லை.

 

முன்னைப் போல பிளாக் பக்கம் வர முடியவில்லை. விருப்பமான பதிவர்களின் எழுத்துக்களை கொஞ்சநாளாய் வாசிக்க முடியவில்லை. எழுதவும் முடியவில்ல. இடையிடையே கார்ட்டூன்கள்,  மீள் பதிவுகள் என பதிவுகள் போட்டு ஒப்பேற்றிப் பார்த்தேன். இந்த ஆக்கத்தில், உங்கள் “பிளாக்கில் malware இருக்கிறது” என்று ஒரு தகவலை கூகிள் குரோமும், நண்பர்களும் நான்கு நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நேரம் வாய்த்தது. சரிசெய்து புதிய templateக்கு மாறினேன். பதிவுகள் எழுதமுடியவில்லை. நேரமில்லை.

 

ன் நேரமில்லை என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கு முன் இரண்டு நிகழ்வுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வங்கியில், ஏழுமாத கர்ப்பிணிப் பெண் ஊழியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம், திடுமென டிரான்ஸ்பர். “இது மோசமானது” என்று நாங்கள் சங்கத்திலிருந்து சொன்னோம். அந்தப் பெண் ஊழியரோ, “பரவாயில்ல. நான் போகிறேன். ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, குழந்தை பிறந்த பிறகு பிப்ரவரி மாதம் செல்கிறேன்” என்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்குச் சென்ற எங்களிடம் “கர்ப்பமடைவதும், பிள்ளை பெறுவதும் வாழ்வின் ஒரு பகுதி. இதற்கெல்லாமா வங்கி உதவ முடியும்” என்றது.

இன்னொரு பெண் ஊழியர் விருதுநகர் மாவட்டத்தில் பணி புரிகிறார். திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகின்றன. அவரது கணவர் திண்டுக்கல் அருகே பணி புரிகிறார். எங்கள் வங்கியின் வத்தலக்குண்டு கிளைக்கு ஆள் தேவைப்படுகிறது. அந்த இடத்திற்கு நாங்கள் அந்தப் பெண் ஊழியருக்கு டிரான்ஸ்பர் கேட்டோம். அதற்கு நிர்வாகம் சொன்ன பதில் கொடூரமானது! “ஓஹோ...! இரண்டு பேரையும் வங்கிச் செலவில் சேர்த்து வைக்க வேண்டும். அந்தம்மா conceive ஆவாங்க. அதுக்கும் வங்கிச் செலவில்  maternity leave கொடுக்க வேண்டுமோ” என்று சொன்னது. கடுமையாக கண்டித்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு  வெளியே வந்தோம்.

எங்கள் நிர்வாகத்தின் கோர முகத்தை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு இருக்க முடியும். 

ஏற்கனவே எங்கள் வங்கியில் அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிந்து கொண்டு இருக்கிற தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, அதில் தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் இருவரும் மீண்டும் பணியலமர்த்தப்பட்ட விபரங்களை இங்கே பதிவிட்டு தெரியப்படுத்தி இருந்தேன். நிர்வாகம் மெல்ல மெல்ல தற்காலிக ஊழியர்களை கிளைகளிலிருந்து வெளியே அனுப்பத் தொடங்கியது. லேபர் கமிஷனர் முன்பு தாவா ஏற்படுத்தி, அதை உயர்நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி, தொழில்தாவா முடியும் வரை தற்காலிக பணியாளர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என முறையிட்டோம். எங்கள் வேண்டுதலில் உள்ள நியாயத்தை ஏற்று Status quo நிலைநிறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் நிர்வாகத்தின் வன்மம் மிகுந்த தாக்குதல்கள் இப்படி அரங்கேறுகின்றன.

வங்கி நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர் இங்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் தொடர்ந்து மரியாதையில்லாமல் பேசுவது நீடிக்கிறது. பெண் ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன. நட்பு ரீதியான மனோபாவம் கொஞ்சமும் இல்லாமல், அனைவர் மீதும் வெறுப்பை மட்டுமே காட்டுகிற மனிதர்கள் உயர் பொறுப்புக்கு வந்தால் இப்படியெல்லாம் ஆகும் போலும்.

வங்கியில் இதரக் கடன்கள் எதையும் ஊக்குவிக்காமல், ஏறத்தாழ எங்கள் வங்கியை  ’நகைக்கடன் வங்கியாக’ மாற்றி விட்டது. வங்கியின் நலன் மற்றும் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு விமர்சனம் செய்கிற சங்கத்தின் மீது பாய்கிறது.

இப்போது பொருளாதாரச் சலுகைகள் எதையும் கோரிக்கை வைக்காமல், வங்கியைக் காப்பாற்றவும்,  ஊழியர்கள் சுயமரியாதையை நிலைநிறுத்தவும் போராடத் துவங்கியுள்ளோம். பழிவாங்கும் மாறுதல்கள் போடப்படுகின்றன. ’போஸ்டர் ஒட்டினோம்’ என்றெல்லாம் கூட சங்கத் தலைவர்கள் மீது சார்ஜ் ஷீட்கள் வினியோகிக்கப்படுகின்றன. சஸ்பன்ஷன், டிஸ்மிஸ் என அடக்குமுறையின் குரல்கள் ஒலிக்கின்றன. வரட்டும்.

இருள் நிறைந்த காலத்தில்
பாடல் எதைப் பற்றியதாக இருக்கும்?
“இருட்டைப் பற்றி இருக்கும்”

என்றொரு கவிதைதான் எங்கள் நிலையைச் சரியாய்ச் சொல்லும் என நினைக்கிறேன். சிந்தனைகள், செயல்கள் எல்லாம் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தே இருக்கின்றன. கோரிக்கைகள், கூட்டங்கள், பிரயாணங்கள், பிரச்சாரங்கள் என நாட்கள் சென்று கொண்டு இருக்கின்றன. ’சுற்றி வெளியே நடக்கும் கொடுமைகளின் முன்னால் உங்களின் இந்தப் பிரச்சினையெல்லாம் ஒரு பெரிய விஷயமா’ என்று கேட்கும் குரல்களில் நியாயம் இருக்கலாம். என்ன செய்ய? இந்த  சங்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. கூடாது.

எனவே-
சிறிது காலத்துக்கு இங்கு அவ்வப்போதுதான் வரமுடியும். சின்னச் சின்ன இடைவெளிகள்.  அவ்வளவே. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

*

அவர்களை எடுத்துக் கொண்ட இருட்டு!

22 November 2009

 

அந்த பேருந்து நிலையத்தில் பகலின் அடையாளங்கள் எல்லாம் தளர்ந்து விட்டிருந்தது. திக்குமுக்காட வைத்த மனிதத்திரளும் வாகனங்களின் இரைச்சல்களும் அடங்கிப் போயிருந்தன. நியான் வெளிச்சம் பனியைப் போல கவிந்திருந்தது. டிரைவரால் பஸ் இயக்கப்பட்டவுடன் அவன் முன்புறமாக ஏறி மூன்றாவது வரிசையில் அமர்ந்தான். அவள் பின்புறமாக ஏறி அந்த பஸ்ஸில் ஒரே பெண்ணாக ஏழாவது வரிசையில் அமர்ந்தாள். மொத்தமே பதினோரு பேர்தான். ஆளுக்கொரு வரிசையில் வசதியாய் அமர்ந்திருந்தனர்.

"திருச்செந்தூர் யாரும் இருக்கீங்களா" கேட்டுவந்த கண்டக்டரிடம் "முன்னால அவர் எடுப்பாரு" என்று மெல்ல அவள் சொன்னாள்.

"யாரும்மா" என்று அவர் சத்தமாய் கேட்க மூன்றாம் வரிசையிலிருந்த அவனை கைகாட்டினாள் அவள். திரும்பிய அவனைப் பார்த்து கண்டக்டர் லேசாய் சிரித்தார்.

அவன் சட்டென முகம் திருப்பிக் கொண்டான். இடைப்பட்டவர்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு கண்டக்டர் இப்போது அவன் அருகே வந்தார். "ஒரு திருச்செந்தூர்" என்றான்.

அவனை ஒருமாதிரியாய் பார்த்து விட்டு திரும்பி அவளையும் பார்த்து விட்டு "அந்தப் பொண்ணு நீங்க டிக்கெட் எடுப்பீங்கன்னு சொல்லிச்சே" என்றார். "எனக்குத் தெரியாது" என்றான் அவன்.

கண்டக்டர் வேகமாய் அவளிடம் போய் "என்னம்மா, அந்த ஆள் ஒனக்கு டிக்கெட் எடுக்க மாட்டேங்குறாரு" கத்தினார்.

அவள் வேகமாய் எழுந்து அவன் அருகேப் போய் "எதுக்குய்யா என்னை கூப்பிட்டே..?" கத்தினாள்.

அவன் திரும்பியேப் பார்க்கவில்லை. பஸ்ஸிற்கு வெளியில் பார்வையை புதைத்துக் கொண்டான்.

"நீயெல்லாம் ஒரு ஆம்பிள...த்தூ"

அவன் திரும்பவேயில்லை.

"சரிம்மா..நீயாவது காசு கொடு...டிக்கெட் எடுக்கணும்ல.."

"நா என்ன திருச்செந்தூருக்கு சாமி கும்பிடயா போறேன்?"

கண்டக்டர் விசில் ஊத பஸ் நின்றது. இறங்கிய அவளை இருட்டு எடுத்துக் கொண்டது.

ஓடிய பஸ்ஸிற்குள் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டன. இருட்டு அவனையும் எடுத்துக் கொண்டது.

(திருத்தம் செய்யப்பட்ட மீள் பதிவு இது)

காற்றில் எழுதிய கண்ணீர்ப் பாடல்கள்

20 November 2009

 

“எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
சோறு கேட்டா சோத்தால அடிப்பா
கொழம்பு கேட்டா கொண்டைய அறுப்பா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா
எம் பொண்டாட்டி நல்லவளய்யா”

சின்ன வயசில் இந்தப் பாடலை எங்கள் பள்ளியின் காவல்கார தாத்தா பாடுவார். சுற்றி உட்கார்ந்து கேட்டு கேட்டு மக்கள் சிரிப்பார்கள்.

பெண்கள் பக்கமிருந்து இது போல ஆயிரம் பாடல்களை பின்னாட்களில் அறிய முடிந்தது. ஆனால் சிரிக்க முடியவில்லை.

டாக்டர் முத்துசிதம்பரம் அவர்கள் தொகுத்த பாடல்களில் இருந்து சில கண்ணீர் முத்துக்களை சினேகா என்பவர் தொகுத்து இருந்தார். அதிலிருந்து சிலவற்றை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். சபிக்கப்பட்ட காலம் உங்கள் நரம்புகளுக்குள் ஊடுருவி அழுவதை கேட்க முடியும். நாட்டுப்புறப் பெண்களின் இந்தக் குரல்களை வழிவழியாய் காற்று சுமந்து கொண்டு இருக்கிறது. குடும்ப வன்முறையின் கோரக் காட்சிகள் இவை.

*

“மாமன் மகளிருக்க
மாலையிடும் சாமியிருக்க
பேசும் கிளி நானிருக்க
பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு
பெருங்கஷ்டத்துக்கு ஆளாச்சே”

* 

“நாடெல்லாம் சுத்திவந்து
நல்லபிள்ளையில்லை என்று
கொணங்கெட்ட மாப்பிள்ளைக்குக்
கொண்டி கொடுத்தார் - எங்களண்ண
கொண்டி கொடுத்தார்”

*

“சோளச்சோறு தின்னமாட்டேன்
சொன்னபடி கேக்கமாட்டேன்
நரைச்ச கிழவன்கிட்ட நானிருந்து
வாழமாட்டேன்”

*

“கள்ளுலே பூச்சி கெடந்தா
கலக்கிக்கலக்கிக் குடிக்கிறாண்டி
சோத்திலே கல்கெடந்தா சொந்தப்
பொண்டாட்டிய அடிக்கிறாண்டி”

*

“கான மிளகு வச்சுக்
கறிக்கு மசால் கூட்டிவச்சுக்
கொழம்பு ஒறைக்குதுண்ணு
என்னைக் கதவடைச்சுக் கொல்லுதாரே
அறியாத ஊரிலேயேத்
தெரியாத வாக்கப்பட்டேன்
அடியாதிங்க புடியாதிங்க - நான்
விடியாம ஓடிப்போறேன்”

*

“அரிசி படியளந்து என்னை
அழைச்சி வந்த
மாமியத்த ஒன்ன ஒரு
அரணபுடுங்குமோ
நீபெத்த புள்ளகிட்ட நான்
அச்சமத்து வாழுவனோ”

*

செல்போன் கார்ட்டூன்கள்!

18 November 2009

 

indian ink என்னும் வலைத்தளத்தில் ;’சைபர் ஹ்யூமர்’ என்னும் தலைப்பில் வைத்த போட்டிக்கு வந்து பரிசு பெற்ற கார்ட்டூன்களில் சில இவை.  நகைச்சுவை மட்டுமில்லாமல், நாம் இழந்து நிற்கும் சிலவற்றையும் இந்தப் படங்கள் சொல்கின்றன. உங்களுக்கு எது மிகவும் பிடித்த கார்ட்டூன் என்று சொல்லுங்களேன்.

 

(1)

cell 06

 

(2)

cell 07

(3)

cell 05

(4)

 

cell 03

(5)

cell 02

கை கொடுங்கள் சச்சின்!

17 November 2009

 

முன்னர் ஒருமுறையும் சச்சின் ஒரு கருத்து தெரிவித்தார். வெறுக்கவே முடியாத அந்த விளையாட்டு வீரர் மீது அப்போது வருத்தம் கூட வந்தது.

அப்போது மத்தியில் பி.ஜே.பி ஆட்சி இருந்தது. வாஜ்பாயின் மூட்டு வலிக்கும், அத்வானியின் வயிற்றுவலிக்கும் கூட பாகிஸ்தான் காரணம் என்னும் அளவுக்கு இந்துத்துவா பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு கிரிகெட் தொடரில் பாகிஸ்தானை வென்றதற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. வெற்றி குறித்து அனைவருக்கும் சந்தோஷம் தான். கொண்டாடப்பட வேண்டியதுதான். நம் வீரர்களூகு அது மிகப் பெரிய ஊக்கமாகவும், ஆதரவாகவும் இருக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் மற்ற வெற்றிகளுக்கும், பாகிஸ்தானிடம் அடைந்த வெற்றிக்கும் வித்தியாசம் ஏற்படுத்துவதுதான் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. அதற்காக விசேஷ சலுகைகள் ஒரு அரசு அளிக்கிறது என்றால் அந்த அரசுக்கு கிரிக்கெட்டைத் தாண்டி வேறொரு நோக்கமிருக்கிறது என்பதை புரிந்தாக வேண்டி இருந்தது.

தொடரின் நான்காவது விளையாட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட போது  'பாகிஸ்தானைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது சந்தோஷமளிக்கிறது' என்று சச்சின் சொன்னார். எந்த அணியை வென்றாலும் அவருக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் என்ற அழுத்தம் ஏன் என்று கேள்வி எழுந்தது. அது அவரின் உண்மையான சந்தோஷமா? யாரையாவது திருப்திப் படுத்த அவர் அடைந்த சந்தோஷமா? அல்லது அவரும் சூழலின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, அடைந்த சந்தோஷமா? எப்படியிருந்தாலும் தவறு என்றே பட்டது. அந்த வார்த்தைகள் வாய் தவறி வந்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொள்ளவே தோன்றியது. எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும்,  சுற்றிலும் வியூகம் அமைக்கப்பட்டிருக்கிற வேளையிலும் விவேகமாய் விளையாடக்கூடிய சச்சின் டெண்டுல்கர் கூட, தன்னை ஒரு கணம் இழந்து விட்டாரோ என்று அடி மனதில் ஒரு சங்கடம் ஏற்பட்டது.

இன்று அதே சச்சினை நினைத்தால் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. விளையாட்டில் நான் நேசிக்கும் ஒரு வீரர், வாழ்க்கையிலும் நான் நேசிக்கிற மனிதராகி இருக்கிறார். அதிகாரமும், ஆணவமும், குறுகிய நலனும், பாசிச முகமும் கொண்ட இயக்கங்களுக்கு எதிராக, தைரியமாகவும், அமைதியாகவும், “மும்பை மாநகரம் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது” என்று கூறி இருக்கிறார். பீகாரிகளை மும்பையை விட்டு விரட்டி விரட்டி அடித்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் பிடிக்காது. இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்தததற்காக “ஆஷ்மியின் தந்தூரியை செய்து கொண்டு வாருங்கள்” என்று சொன்ன அங்கிளுக்கும், ஆஷ்மியை அடித்த மருமானுக்கும் இந்த வார்த்தைகள் தாங்க முடியாதவை. பாரத ஸ்டேட் வங்கியில், மராட்டியர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு போய்விட்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் கொதிப்பை ஏற்படுத்துபவை. தான் செய்வது இன்னதென்று அறிந்தே, இந்தக் காரியத்தை செய்திருப்பதால்தான் சச்சினை மிகவும் பிடிக்கிறது.

சமூகம் மதிக்கிற முக்கியமான மனிதர்கள் இதுபோன்ற தருணத்தில் உண்மையை பேசாமல் வாய்மூடி மௌனம் சாதிப்பது, பெரும் கேடுகளுக்கு வழி வகுத்து விடுகிறது. இளைஞர்களின் முன்னுதாரணமாய் இருப்பவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி உண்டு. அவை சுயநலன்களைத் தாண்டி, சமூகப் பொறுப்போடு வெளிப்படும்போது ஆரோக்கியமானதாகின்றன.

கலைஞர்களும், விளயாட்டு வீரர்களும் தத்தம் பிரதேசங்களின் தூதுவர்கள். அவர்களது ராஜ்ஜியம் எல்லையற்றது. தங்கள் திறமையின் மூலம் தங்கள் மண்ணை, அங்கு வாழும் மக்களை உலகமே நேசிக்கச் செய்ய வேண்டும். அதுதான் அவரது விளையாட்டுக்கு பெருமை. அவருக்கும் பெருமை.

தாங்க முடியாமல் சச்சினைப் பார்த்து “விளையாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அரசியல் வேண்டாம் உங்களுக்கு” என்கிறார் மூத்த தாக்கரே. மைதானத்தைத் தாண்டியும் உலகம் விரிந்து இருக்கிறது. சச்சினிடமிருந்து பந்துகள் இப்படி எல்லைக்கோட்டைத் தாண்டுவது பார்ப்பதற்கே நல்லாயிருக்கிறது. கைகொடுங்கள் சச்சின்!

Related Posts with Thumbnails

* * * * * * * * * *

* * * * * * * * * *

* * * * * * * * * *

* * * * * * * * * *