சொல்லாமல் சொல்லும் சேதி


நேற்று ஈரானியப் படம் "கலர் ஆப் பாரடைஸ்' (COLOR OF PARADISE) பார்த்தேன். மஜித் மஜிதியின் படம். இதற்கு முன்பு அவரது CHILDREN OF HEAVEN பார்த்திருக்கிறேன். பார்வையாளர்களையும் குழந்தைகளின் உலகத்திற்குள் சஞ்சரிக்க வைக்கிற மிக நுட்பமான கலைஞராயிருக்கிறார். கள்ளமற்ற பார்வை, மௌனம், ஆவல், கனவுகள், விளையாட்டு, ஏக்கம், பரிவு என குழந்தைகளின் அத்தனை வண்ணங்களும் வைத்திருக்கிற சித்திரக்காரர். ஒலிக்குறிப்புகளாலேயே பூனையை விரட்டி, கூட்டிலிருந்து விழுந்து கிடக்கும் பறவையின் குஞ்சை வாஞ்சையோடு பாதுகாக்கும், அந்த விரல்களின் அசைவுகள் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.
ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் அந்த சிறுவன் நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பது போல இருக்கிறது. மற்ற பெற்றோர் எல்லாம் தத்தம் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் சென்று விட, வராத தன் தந்தைக்காக காத்திருக்கும் குழந்தையின் தனிமை தாங்க முடியாததாய் இருக்கிறது. கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு வயல்வெளிகளில் தன் தங்கையோடும், பாட்டியோடும் அவன் விளையாடும் காட்சிகள் காற்றின் அலைகளாய் நம்மைத் தழுவிச் செல்கின்றன.
இரண்டாம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு, ஏமாந்து, மகன் மீது பாசமும், வெறுப்பும் ஒரு சேரக் கலந்து வெளிப்படுத்தும் அவனது தந்தை நிகழ்காலத்துக்கும், வருங்காலத்துக்கும் இடையில் அல்லாடும் ஒரு சாதாரண பிறவி. வெள்ளத்தில் அடித்துப் போகும் தன் குழந்தையை காப்பாற்ற போராடும் காட்சிகளில் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. இதுதான் color of paradise!

பாடல்கள் கிடையாது. எந்தச் சண்டையும் கிடையாது. ஆனாலும் தமிழ்க் குழந்தைகளின் கண்கள் திரையை விட்டு அகலவேயில்லை. கண்கள் பனிக்க உட்கார்ந்திருக்கின்றன. கார்ட்டூன்களின் சிறைகளிலிருந்து அவர்களை வெளிக் கொண்டு வந்து சுவாசிக்க வைத்திருக்கிறார் மஜித் மஜிதி. உலகத்தின் குழந்தைகள் எல்லாம் அவரது குழந்தைளை நேசிக்கின்றன.


இந்த திரைப்படம் இன்னொன்றை சொல்லாமல் சொல்வதாய் படுகிறது. புஷ் அறிவித்திருக்கும் பயங்கரவாதிகளின் நிலம் ஒன்றிலிருந்துதான் இப்படி மென்மையான, அழகான திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. உலகத்தை அழிக்கும் ஆயுதங்கள் அவர்களிடம் இருக்கின்றன என இராக்கிற்கு அடுத்தபடியாய் ஈரானைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் இந்த color of paradise வந்திருக்கிறது. பயங்கரமாய் அழுகிப் போகும் உடல்களையும், பயங்கரமாய் வெடித்துச் சிதறும் கார்களையும், பயங்கரமாய் வரும் இயந்திர மனிதர்களையும் சளைக்காமல் காட்டி வருகிற ஹாலிவுட்டிலிருந்து இப்படி ஒரு படம் எப்போது வந்திருக்கிறது என்று தெரியவில்லை. பார்வையற்ற அந்தக் குழந்தையின் கைகள் புஷ் எழுப்பிய எல்லா பிம்பங்களையும் அழித்துக் கொண்டே செல்கின்றன.
முன் பக்கம்

Comments

5 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. வருக வருக
    வலையுலகிற்கு நல்வரவு

    ஜோதியில் கலந்தாச்சு
    அடிச்சு தூள் கிளப்புங்க மாதவராஜ்

    ReplyDelete
  2. anbirku iniya mathav

    vanakkam
    vaazhthukkal

    Unexpected, but a pleasant surprise to spot your blog. an exciting opening. all the very best!

    s v venugopalan

    ReplyDelete
  3. Hi Uncle!

    Welcome to Blogosphere. Remember, I created a blog for you loooong back. But you had not time to update that one. Delighted to see this. Will follow your blog regularly.

    Cheerz,
    Deepa

    ReplyDelete
  4. அன்புள்ள மாது.
    உங்கள் வலைப்பக்கத்தை வாசித்தேன். ஆரம்பமே பரபரப்பும் கவனத்துக்குரிய விவாதங்களுமாக துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்
    சிங்கிஸ் ஐத்மேதாவ் பற்றி என் வலைத்தளத்தில் பதிவு ஒன்று உள்ளது. ஐத்மேதாவின் மரணம் குறித்து என்னால் தாமதமாகவே அறிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு ஒரு அஞ்சிலி போல தான் அந்த பதிவை எழுதினேன். நாவல் முகாமில் பேசியது அதன் தொடர்ச்சியே.
    மிக்க அன்புடன்
    எஸ்.ராமகிருஷ்ணன்.

    ReplyDelete
  5. ஆஹா... எஸ்.ராமகிருஷ்ணனா!

    மிக்க சந்தோஷம்.

    சும்மா பேசிக்கொண்டிருப்பதற்கு இப்படி blog எழுத ஆரம்பித்தேன்.
    இப்போது உற்சாகமாய் இருக்கிறது.
    மிக்க நன்றி, எஸ்.ராமகிருஷ்ணன்!

    ReplyDelete

You can comment here