வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர்-3







3. Grapes of wrath




(அக்னி திராட்சைகள்)


1929 என்றதும் நினைவுக்கு வருவது உலகம் முழுவதும் ஏற்பட்ட அந்த பொருளாதார நெருக்கடி. சாமானிய மக்களை விரக்தியின் விளிம்பில் கொண்டு நிறுத்திய காலமாக வரலாற்றின் பக்கங்களில் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலாளிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் லாபம் கண்ணை முழுமையாக மறைக்க ஆரம்பித்திருந்தது. விவசாயம் சிதைந்து போக விளைநிலங்கள் நாசமாக ஆரம்பித்தன. எளியவர்கள் மூச்சுத் திணறிப் போனார்கள். சொந்த மண்ணை விட்டு தங்களை பிடுங்கி எடுத்துக் கொண்டு சுவாசிப்பதற்காக புலம்பெயர்ந்தார்கள். கனவுகளைக் கொன்றபடி ஒவ்வொரு நாளும் தங்களை முடித்துக் கொண்டனர்.


அந்தக் கோர பிம்பங்கள் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் விஸ்வரூபமெடுத்தன. சாதாரண மக்கள் வாழ்வின் ஆதாரங்களற்று சூனியத்தில் நின்றிருந்தார்கள். ஸ்டெய்ன்பெர்க் என்னும் எழுத்தாளர் அந்த அழிவின் காட்சிகளிலிருந்து மனித வாழ்வை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் பத்து வருடங்கள் கழித்து 1939ல் Grapes of wrath என்னும் நாவலாக வெளி வந்தது.



பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் மீளாமல் அடுத்த உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகள் வெளிப்பட ஆரம்பித்த காலக்கட்டத்தில், முந்தைய நாட்களை இரத்தமும் சதையுமாய் தோண்டியெடுத்து இந்த நாவல் உலகின் சிந்தனையில் உறைக்க வைத்தது. சோஷலிச முகாமை எதிர்த்து 'பெரிய மனிதனாக' தன்னை அறிவித்துக்கொள்ள அமெரிக்கா பதுங்கியிருந்த காலக்கட்டத்தில் கடுங்கோபத்தோடு இந்த நாவல் முதலாளித்துவத்தின் அழுகிப் போன முகத்தை எல்லோருக்கும் அறிவித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


உடனடியாக கெர்ன் கவுண்டி நிர்வாகம் 'பொய்களின் மூட்டை' என நாவலை தடை செய்வதாக அறிவித்தது. தீயிட்டும் கொளுத்தினார்கள். அமெரிக்க காங்கிரஸில் நாவலை தடை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. நூலகங்களில் தடை செய்யப்பட்டன. கொச்சைத்தனமான வார்த்தைகள் கொண்ட இந்தப் புத்தகம் பள்ளிக்கூடங்களில் இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. முதலாளிகளும், வலதுசாரிகளும் நாவலை கம்யூனிஸத்தின் வக்கிரப் பிரச்சாரம் என்றும் ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டனர்.



இவையெல்லாவற்றையும் மீறி இந்தப் புத்தகம் பெரும் வெற்றி பெற்றது. அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சுகிற எழுத்துக்கள் இவை என அறிஞர் பெருமக்கள் புகழ்ந்தனர். தன் மீது கடுமையான கண்டனங்கள் எழும்பும் என்று மட்டும் எதிர்பார்த்திருந்த ஸ்டெய்ன்பெர்க்கிற்கு பெரும் ஆச்சரியமாக இருந்ததாம். ஒவ்வொரு நாளும் சராசரியாக 2500 பிரதிகள் விற்றன. ஒரு வருடத்திற்குள் ஐந்து லட்சம் பிரதிகள் மக்களிடம் சென்றுவிட, உலகின் பல மொழிகளில் வெளியாகியது. நாவலுக்கான வரவேற்பை கண்டுகொண்டு அப்போதைய ஜனாதிபதி ரூஸ்வேர்ல்டின் துணைவியாரும் நாவலை புகழ ஆரம்பித்திருக்கிறார். இதுதான் 'அமெரிக்க ஜனநயகத்தின்' சிறப்பான அம்சமே. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு. ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான கருத்தாயிருந்தாலும் ஒரு அசட்டுச் சிரிப்போடு அதையும் அவர்களே பிரசிங்கிப்பர்கள். இந்தத் தந்திரங்கள், தடைகளை உடைத்துக் கொண்டு சமூகத்தை ஆரத்தழுவிக் கொள்கிற பரந்த கரங்கள் அந்த நாவலுக்குள் இருந்தன.



தனிப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தாமல் ஓக்லஹோமா பிரதேசத்திலிருந்து கதையை ஆரம்பிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க். சூரிய ஓளியை மறைத்து அடர்த்தியாக எங்கும் தூசி நிறைந்திருக்கிறது. மூக்கைத் துணியால் மூடிக்கொண்டும், கண்ணாடி அணிந்துகொண்டும்தான் மனிதர்கள் செல்கிறார்கள். காற்று வீசுவது நின்றதும் சகல இடங்களிலும் தூசி படிந்து விடுகிறது. சோள வயல்கள் அழிந்து விடுகின்றன. மனிதர்கள் செய்வதறியாமல் வெளிறிப் போயிருக்கிறார்கள்.


காற்று இப்படி அழுக்காகி அழிச்சாட்டியம் செய்வதற்கு முன்பாக வங்கியின் அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்திருக்கிறார்கள். டிராக்டர்கள் நிலத்தை இராட்சசத்தனமாகக் குதறிப் போட்டபோதே அழிவின் ரேகைகள் தெரிய ஆரம்பித்து விட்டன. ஒரு டிராக்டர் பனிரெண்டு குடும்பங்களின் வாழ்வைப் பறித்து விட்டது. கம்பெனிகள் குறுகியகால பலன்களுக்காக பருத்தியை விதைக்க வைத்து நிலத்தின் வளத்தை சுரண்டி விட்டிருந்தது. வங்கியின் கணக்குகளே எல்லாவற்றையும், எல்லோரையும் தீர்மானித்துக் கொண்டிருந்தன. வங்கியதிகாரிகள் டிராக்டர்களை பிடுங்கிக்கொண்டு குத்தகை விவசாயிகளை காலி செய்து விடுகிறார்கள். அவர்கள் மீது விவசாயிகளுக்கு கடுங்கோபம் வருகிறது. பெரும் சக்தியின் அலைக்கழிப்புகளில் அகப்பட்ட துரும்புகளாகிப் போகிறார்கள் மனிதர்கள்.



பொருந்தாத ஆனால் புதிய சட்டையணிந்த, முப்பது வயது மதிக்கத்தக்க டாம் ஜோட் அந்த ஊருக்கு வருகிறான். அவனை ஏற்றிச்செல்லும் டிரக்கர் டிரைவரிடம் தான் ஒரு கொலைக் குற்றத்திற்காக நான்கு வருடங்கள் சிறையில் கழித்து விட்டு, திரும்புவதாகச் சொல்கிறான். வீட்டை நோக்கி நடந்து செல்லும்போது, ஒரு மரத்தின் நிழலில் பழைய போதகன் ஜிம் கேஸி உட்கார்ந்து 'இயேசுவே எனது இரட்சகர்' என்று பாடிக்கொண்டு இருக்கிறான். அவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. பெண்களோடு ஏற்பட்ட சகவாசங்களால் வருத்தமடைந்தாலும், புனிதமும் தெய்வீகமும் எல்லா மனிதர்களிடமும் இருப்பதாக கருதுகிறான் கேஸி. சிறை வாழ்க்கையைப் பற்றி, ஒரு வீட்டைப் பெறுவதற்கு தங்கள் குடும்பம் பட்ட பாட்டைப் பற்றி விவரிக்கிறான் டாம்.


இருவரும் டாமின் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வீடே சிதைந்து வெறிச்சென்று இருக்கிறது. ஒரு பூனை மட்டுமே இருக்கிறது. வெட்டப்பட்ட கடவுளின் கைகள் போல இருப்பதாகச் சொல்கிறான் கேஸி. முல்லே என்னும் வயதான மனிதரை காண்கிறார்கள். நடந்த எல்லாவற்றையும் அவர் விவரிக்கிறார். அவருடைய குடும்பமும் கலிபோர்னியாவுக்கு பிழைப்புத் தேடி புலம் பெயர்ந்து விட்டதாகவும், தான் எங்கும் செல்ல விரும்பாமல் நிலங்களின் மீது ஆவி போல அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். டாமின் குடும்பத்தார் அங்க்கிள் ஜானின் வீட்டில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.



தனது மனைவியை நோயால் பறிகொடுத்திருந்த ஜான் கிட்டத்தட்ட புத்தி பேதலித்தவரைப் போல இருக்கிறார். வலிமையான, உறுதியான டாமின் அம்மாவே குடும்பத்தின் மையம். தாத்தா, பாட்டி, பிறக்கும்போதே மனவளர்ச்சி குன்றிய சகோதரன் நோவா, திருமணமாகி கர்ப்பமுற்றிருந்த சகோதரி ரோஸஷரன், பதினாறு வயதின் திளைப்பிலிருக்கிற இளைய சகோதரன் ஆல், பத்து பனிரெண்டே வயதேயான ருத்தி, வின்பீல்டு என்னும் இரண்டு சகோதரிகள் என எல்லோரோடும் மீண்டும் இணைகிறான் டாம்.


கலிபோர்னியாவுக்குச் செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு வேலைகள் இருப்பதாக விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். தங்கள் பொருட்களை விற்கிறார்கள். எல்லாம் அடிமாட்டு விலைக்குத்தான் போகிறது. விற்க முடியாததை எரிக்கத்தான் வேண்டும். தூக்கிச் சுமந்து செல்ல இடமிருக்காது. கையில் இருநூறு டாலர்களே வைத்திருக்கிறார்கள். கேஸியும் அவர்களோடு செல்ல விரும்புகிறான். போதிப்பதற்கு பதிலாக, நிலங்களில் மனிதர்களோடு வேலை பார்த்து, அவர்கள் பேசுவதை கேட்க வேண்டியது நிறைய இருப்பதாகச் சொல்கிறான். பன்றிகளைக் கொன்று வழியில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். அப்பாவும் அங்கிள் ஜானும் ஒரு டிரக்கரை அழைத்து வருகிறார்கள். டிராக்டர் தவிர எதுவுமற்றதாய் வீடு நிற்கிறது. டிராக்டர்கள் ஒய்வெடுக்கும்போது வாழ்க்கை அவைகளை விட்டுவிட்டு கடந்து போகிறது.



நெடுஞ்சாலை நம்பர் 66 தான் மிசிசிபியிலிருந்து, பேக்கர்ஸ்பீல்டு வழியாக கலிபோர்னியாவுக்குச் செல்லும் முக்கிய பாதை. 'குப்பைகளிலிருந்தும், நாற்றங்களிலிருந்தும்' வரும் அகதிகள் வரிசையாக சென்று கொண்டு இருக்கிறார்கள். வழியில் அங்கங்கு பழுதடைந்துபோன கார்களின் அருகில் சிறு கூட்டமாய் குடும்பங்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.


கலிபோர்னியா மிகப் பெரிய மாநிலமாக இருந்தாலும், வருகிற தொழிலாளிகள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலையில் இல்லை. எல்லை கண்காணிப்பு அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி விடவும் கூடும். செல்லமாய் வளர்த்த நாய் இறந்து விடுகிறது. டாமின் தாத்தாவும் இறந்து போகிறார்.


கன்சாஸ் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் வில்சன் குடும்பம் தாத்தாவை புதைப்பதற்கு உதவுகிறது. சொந்த மண்ணிலிருந்து பிரிந்து வந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என ஜிம்கேஸி சொல்கிறான். பயணத்தில் அவர்களோடு வில்சன் குடும்பமும் இணைந்து கொள்கிறது. வழியில் உள்ள கடைகளில் இப்படி வருபவர்களுக்கு பொருட்கள் கொடுக்க தயக்கங்கள் இருக்கின்றன. பணத்தைக் கொடுக்காமல் திருடிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.


ரோஸஷரனுக்கு கலிபோர்னியாவில் சென்று என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. அவள் கணவனுக்கு எதாவது தொழிற்சாலையில் வேலைபார்த்துக் கொண்டு வானொலி மூலம் எதாவது படிக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. வில்சனின் கார் பழுதடைகிறது. ஜோட் குடும்பத்தாரை பயணத்தைத் தொடருமாறு வில்சன் சொல்கிறார். டாமின் அம்மா மறுக்கிறார். சேர்ந்தே செல்வோம் என்கிறார். காரை பாதுகாப்பாக நிறுத்தி பயணத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள்.


கலிபோர்னியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் ஒருவர், அங்கு வேலை இருப்பதாக விளம்பரங்கள் செய்திருப்பதெல்லாம் மோசடி வேலை என்கிறார். "800 பேர் தேவைப்படும் வேலைக்கு பல ஆயிரம் பேர் வேலை கேட்டு வருகிறார்கள். அவர்களில் குறைந்த கூலி கேட்பவர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்" என்று அனுபவத்தை சொல்கிறார்.

வருவது வரட்டும் என கலிபோர்னியாவை நெருங்குகிறார்கள்.


போலீஸ் அங்கங்கு விசாரிக்கிறது. இதற்கு கைதாகி சிறையில் இருப்பதே மேல் என வில்சனுக்கு தோன்றுகிறது. புலம்பெயர்ந்து வந்திருந்த பலர் எங்கே செல்வது எனத் தெரியாமல் திரும்பிக் கொண்டிருந்தனர். டாமின் சகோதரன் நோவா அதற்கு மேல் தன்னால் வர முடியாது என ஆற்றின் கரையில் இறங்கி விடுகிறான். தான் மீன்பிடித்து வாழப்போவதாகச் சொல்கிறான். பாட்டியும் இறந்து போகிறார். கடைவீதியில் ஒரு சிறுவன் இவர்களைப் பார்த்து "காட்டுமிராண்டிகளைப் போல இருக்கிறார்கள்" என்று சொன்னது காதில் விழுகிறது. அங்கிள் ஜானும், வில்சனும் தங்கள் அனைவருக்காகவும் ஜிம் கேஸியை பிரார்த்திக்கச் சொல்கிறார்கள். அவனுக்கோ கடவுள் மீது இருந்த நம்பிக்கை கலைந்துகொண்டு இருக்கிறது.


ஒருகாலத்தில் மெக்ஸிகோவின் பகுதியாக இருந்த கலிபோர்னியாவின் நிலங்களை அமெரிக்க விழுங்கிய பிறகு, ஆசியப் பகுதியிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்து உழைப்பைச் சுரண்டினார்கள். நிலப்பிரபுக்கள் மெல்ல மெல்ல தொழிலதிபதிகளாகி விட்டிருந்தார்கள். புலம் பெயர்ந்து வருபவர்களை அவர்கள் வெறுத்தார்கள். உணவுக்கு ஏங்குகிற அவர்களிடம் நாகரீகம் இருப்பதில்லையாம். சொத்துக்கள் ஒரு சிலரிடம் அதிகமாக குவியும்போது, நாதியற்றவர்கள் கலகம் செய்வார்கள் எனவும் பயந்தார்கள்.


புலம் பெயர்ந்து தங்கியிருக்கும் ஒரு முகாமைச் சென்றடைந்து வேலை எதாவது கிடைக்க வாய்ப்பு உண்டா என இவர்கள் விசாரிக்கிறார்கள். டாமின் அம்மா சமையல் செய்ய நெருப்பு பற்ற வைக்கிற போது சுற்றிலும் அங்குள்ள குழந்தைகள் காத்திருப்பதைப் பார்க்கிறாள். போலீஸ் அலைக்கழிக்கிறது. அங்கிருப்பவர்களை ஒன்று திரட்ட எதாவது வழியுண்டா என டாம் யோசிக்கிறான். ரோஸஷரனின் கணவன் தவறான முடிவெடுத்து டாம் குடும்பத்தாரோடு வந்து விட்டோமோ என நினைக்கிறான். ஒரு தகராறில் டாம் போலீஸ் ஒருவனை அடித்து விட ஜிம் கேஸி அந்தப் பழியை தான் ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறான்.


அங்கிள் ஜான் வேதனையில் நிறையக் குடித்து நதிக்கரையில் கிடக்கிறார். டாம் அவரை அழைத்து வருகிறான். ரோஸஷரனின் கணவன் இவர்கள் அனைவரையும் விட்டுச் சென்று விடுகிறான். அரசின் முகாம் ஒன்று வசதியாய் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.



கடந்த காலத்தை, பிறந்த மண்ணை, வாழ்க்கையை தொலைத்து வந்திருக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கு கலிபோர்னியா கொடுத்த வரவேற்பு ஆத்திரமடைய வைக்கிறது. பெரிய தொழிலதிபர்கள் இதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சந்தையில் அதிகமான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்கிறார்கள். இதனால் சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அரசு முகாமில் தண்ணீர், கழிப்பிட வசதிகள் எல்லாம் இருக்கின்றன. தாமஸ் என்னும் காண்டிராக்டர் குறைந்த கூலியில் வேலை தருகிறான். டாமின் அம்மா தங்கள் குடும்பம் இழந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து வருத்தம் கொள்கிறாள்.


கலிபோர்னியாவில் வசந்த காலம் மரங்களில் பூக்களாகவும், கனிகளாகவும் வண்ணம் கொள்கிறது. திராட்சைகளை படைத்தவர்களால் தங்களுக்கான அமைப்பை படைக்கமுடியாமல் இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த கனிகளுக்கு அதிகப்படியான விலையை நிர்ணயிக்கிறார்கள். விற்காமல் அழுகிப் போனாலும் அதிலிருந்து ஒயினை தயார் செய்து சாமானியர்களுக்கு அவர்களால் கொடுத்து விட முடியும். ஆரோக்கியமற்ற நிலையில் குழந்தைகளே இறந்து போகிறார்கள்.


குடும்பத்தில் டாமுக்கு மட்டுமே வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை கிடைக்கிறது. வறுமை பயமுறுத்துகிறது. ரோஸஷரனுக்கு பேறுகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேரிஸ்வில்லேவில் பருத்தி நிலங்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதாக டாம் கேள்விப்படுகிறான். வடக்கு நோக்கி புறப்படுகிறார்கள். டாமின் இளைய சகோதரிகள் ருத்திக்கும், வின்பீல்டுக்கும் அங்கிருந்து கலிபோர்னியாவிலிருக்கும் பள்ளிக்கு செல்வது சங்கடமாக இருக்கிறது. பள்ளியில் மற்றவர்கள் கேவலமாக வேறு பேசுகிறார்கள். விலைவாசி அங்கு கடுமையாக இருக்கிறது.


ஒருநாள் இரவில் ஜிம் கேஸியை சந்திக்கிறான் டாம். சிறையில் இருந்து வந்து அங்குள்ள தொழிலாளிகளோடு சேர்ந்து ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கிறான் ஜிம் கேஸி. இனி தன் ஆன்மாவை தன்னிடமே தேடுவதை விட்டுவிட்டு சமூகத்தில் வஞ்சிக்கப்பட்டு நிற்கும் மனிதத்திரளிடம் தேடப் போவதாக சொல்கிறான். டாமும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். போலீஸுக்கும் அவர்களுக்கும் நடந்த தகராறில் டாம் ஒருவனைக் கொன்று விடுகிறான். டாமை மறைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் மீண்டும் பயணம் செய்கிறது.



பருத்தித் தொழிலில் வியாபாரிகள், செய்யும் சூழ்ச்சிகளால் மேலும் மேலும் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இயந்திரங்கள் புகுத்தப்படுவது தொழிலாளர்களை எதிர்காலமற்று நிற்க வைக்கிறது. டாமின் குடும்பம் அருவிக்கரையில் குடிபெயர்கிறது. டாம் காட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான். அம்மா சென்று சந்திக்கிறாள். தன் மகனைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். எல்லாம் சரியான பிறகு குடும்பத்தாரோடு வந்து இணைந்து கொள்வதாகக் கூறிச் சென்று விடுகிறான்.


ஓக்லஹாமாவிலிருந்து வந்ததே தவறு என அப்பா கத்துகிறார். "ஆண்கள் அவர்கள் தலையால் வாழ்கிறார்கள். பெண்கள் தங்கள் கைகளால் வாழ்கிறார்கள்" என அம்மா சொல்கிறாள். அக்கி என்னும் அருகிலிருக்கும் பெண்ணிடம் ஆல் உறவு கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். ஆல், அக்கி, ரோஸஷரன் ஆகியோர் பருத்தி எடுக்கும் தொழிலுக்கு செல்கின்றனர்.


உக்கிரமான மழை பெய்ய ஆரம்பிக்கிறது. வேறு பகுதிக்குச் செல்ல திட்டமிடுகின்றனர். ரோஸஷரனுக்கு பிரசவ வலி வருகிறது. அருவிப்பகுதியில் வெள்ளம் கடுமையாக இருக்கிறது. இறந்து பிறந்த குழந்தையை அங்கிள் ஜான் ஒரு ஆப்பிளபெட்டியில் வைத்து வெள்ளத்தோடு அனுப்புகிறார்.


தானியக் களஞ்சியம் ஒன்றில் பாதுகாப்புக்கு தங்கிக் கொள்கின்றனர். அதன் ஒரு மூலையில் ஒரு மனிதனும் ஒரு சிறுவனும் பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றனர். அம்மா எல்லோரையும் அங்கிருந்து வெளியே போயிருக்கச் சொல்கிறாள். ரோஸஷரன் அந்த மனிதனுக்கு தாய்ப்பாலைக் கொடுத்து காப்பாற்றுகிறாள்.

மனிதத்தின் அழகை மிக உச்சியில் ஏற்றி வைத்து கதையை முடிக்கிறார் ஸ்டெய்ன்பெர்க்.


நாகரீகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கருதப்படுபவர்களிடம் இருக்கும் தாய்மையின் ஒளியை அந்த எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் கொடுப்பதற்கு உயிரின் துளிகளைப் போல அபூர்வமானதை வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. உலகைக் காப்பாற்றும் சக்தி அந்த எளிய மனிதர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் ஒரு அமைப்பையும், செத்துக் கொண்டிருப்பவனுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தாயையும் தராசில் நிறுத்தி சமூகத்திடம் கேள்வி கேட்கிறது நாவல்.


நாவலின் பல இடங்களில் மனிதர்கள் இந்த அமைப்பை சபிப்பதும், கடுங்கோபம் கொள்வதும் உரையாடல்களாக முன்வைக்கப்படிருக்கின்றன. மண்ணின் மீதும், மக்களின் மீதும் ஸ்டெய்ன்பெர்க்கிற்கு இருந்த காதலே அதன் அடிநாதமாக இருப்பதாக விமர்சகர்கள் எழுதுகிறார்கள்.



புழுதியும், புலம் பெயர்தலும், லாபம், லாபம் என முதலாளித்துவம் பசிகொண்டு அலைவதும் இப்போதும் கண்முன்னே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 1929ஐப் போல பெரும் பொருளாதார நெருக்கடியில் உலகம் திரும்பவும் சிக்கிக் கொள்ளும் என்பதற்கு இந்த நாவலின் காட்சிகளே அபாய அறிவிப்பாய் இருக்கிறது. எழுத்தாளன் கடந்த காலத்தைச் சொல்கிறவன் இல்லை. எதிர்காலம் பற்றிய கனவுகள் காண்கிறவன். ஸ்டெய்ன்பெர்க்கின் கனவில் ரோஸஷரன் கொடுத்த தாய்ப்பாலின் ஈரம் படிந்திருக்கிறது. அது யாரையும் சாக விடாது.



இதோ தென்கிழக்குக் கடற்கரையில், தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நம் மண்ணில் கால் வைக்கும் மனிதர்களின் வலியை எத்தனை பேர் இங்கு உணர்ந்திருக்கிறோம்? புலம் பெயர்வது என்பது வேரோடு பிடுங்கி எறியப்படுவதைப் போல என எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?
வரலாற்றில் தடை செய்யப்பட்ட நாவலகள் தொடர்

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நானா முதல்?

    மத்திய கிழக்கு யுத்தத்தில் சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வேதம் நூலைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.புத்தகத்தில் சொல்லிக்கிற மாதிரி ஒன்றுமேயில்லை சல்மான் ருஷ்டியை பிரபலமாக்கியது தவிர.

    பதிலளிநீக்கு
  2. //இதோ தென்கிழக்குக் கடற்கரையில், தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நம் மண்ணில் கால் வைக்கும் மனிதர்களின் வலியை எத்தனை பேர் இங்கு உணர்ந்திருக்கிறோம்? புலம் பெயர்வது என்பது வேரோடு பிடுங்கி எறியப்படுவதைப் போல என எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?//

    இந்த மனிதாபிமான உணர்வு கூட புரிந்து கொள்ள முடியாமல் நிலபிரபுத்துவம் கோணத்தில் யுத்த நியாயக் கருத்து சொல்பவர்களை நினைத்தால் மனதுக்கு வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ''GRAPES OF WRATH'' YOU HAVE SELECTED A ''CONTEMPORARY'' NOVEL for the present time economical crisis.Right selection>>>Touched the heart.''Leaving a place'' /''removing from a place''and ''loosing a place'' are very senstive issue and matter.''Singur'' issue also came my memory.
    small paras could help us to read speedily.Kindly go slowly and steadyly in uploading the articles in the blog.-vimalavidya@gmail.com-Namakkal-9442634002

    பதிலளிநீக்கு
  4. Uncle, Please undertake translating this book in Tamil. It must reach a wide range of readers.

    Your words are so powerful; you are the only person who can do justice to the original version of such books.

    பதிலளிநீக்கு
  5. ராஜ நடராஜன்!

    இரண்டு நாட்கள் வெளியூருக்குச் சென்றுவிட்டு நேற்று இரவுதான் வந்தேன். உடனடியாக உங்கள் கருத்துக்கு அதுதான் பதலளிக்க முடியவில்லை.
    முதன்முதலாய் இந்த வலைப்பக்கத்திற்கு வந்ததற்கு நன்றி.

    புத்தகம் கொடுத்திருக்கும் உணர்வுகளோடு கருத்து எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. விமலவித்யா அவர்களுக்கு!

    உங்கள் ஆலோசனையின் படி பத்திகளை உடனடியாக பிரித்து விட்டேன்.
    எழுத்துப் பிழைகள் கொஞ்சம் இருக்கின்றன. சரி செய்கிறேன்.
    சிங்கூர் குறித்து நீங்கள் ஞாபகப்படுத்தியது பெரும் வெளிச்சமாக எனக்குள் பரவிக்கொண்டு இருக்கிறது.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தீபா!

    எனக்குத் தெரியும்.
    நீயும் நன்றாக அந்தப் புத்தகத்தை மொழியாக்கம் செய்ய முடியும் என நினைக்கிறேன்.
    குழந்தையோடு நீ இருக்கும் நேரம் மிக முக்கியமானது என்பதால்தான் நான் தொந்தரவு செய்யவில்லை.
    தொழிற்சங்க வேலைகள், குறும்பட வேலைகள், நண்பர்கள், இப்போது இந்த வலைப்பக்கங்கள் என செல்லும் பணிகளுக்கு இடையே எப்படி என்னால் மொழியாக்கம் செய்ய முடியும் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!