ஆதலினால் காதல் செய்வீர் - 2ம் அத்தியாயம்


2. உதிரும் சிறகுகள்





தத்துவ மேதை பிளேட்டோ மாணவனாயிருந்த போது அவரது ஆசிரியரிடம் கேட்டாராம். "காதல் என்றால் என்ன? அதை எப்படி அறிவது?"



ஆசிரியர் எதிரே வளமாய் இருந்த கோதுமை வயலைக்காட்டி "அதில் மிக அற்புதமான, நேர்த்தியான தண்டு ஒன்றை நீ கொண்டு வா. காதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒன்றே ஒன்றுதான் கொண்டு வரவேண்டும்" என்றாராம். பிளேட்டோ கோதுமை வயல் முழுவதும் அலைந்து நீண்ட நேரம் கழித்து வெறுங்கையோடு வந்தாராம்.

ஆசிரியர் கேட்டாராம். "ஏன் ஒன்றும் பிடுங்கி வரவில்லை?' அதற்கு பிளேட்டோ சொல்லியிருக்கிறார்." அற்புதமான தண்டுகளை பார்த்தேன். அதைவிடவும் பிரமாதமானது முன்னால் இருக்கும் எனத் தோன்றியது. முன்னால் செல்ல செல்ல அவ்வளவு நல்ல தண்டுகளை காண முடியவில்லை. பின்னாலும் திரும்பி வர முடியாது. இப்படியே கழிந்து விட்டது"

"இதுதான் காதல்" என்றாராம் ஆசிரியர்.

சிறிதுநாள் கழித்து பிளேட்டோ ஆசிரியரிடம் "திருமணம் என்றால் என்ன" என்றாராம்.

ஆசிரியர் "அதோ அடர்ந்த கானகம் இருக்கிறது. அதில் ஒரே ஒரு மரத்தை வெட்ட வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. நீ வெட்டியதுதான் மிக உயரமான மரம் என்றால் திருமணத்தை புரிந்து கொள்வாய்" என்றாராம்.

பிளேட்டோ கொஞ்ச நேரத்தில் ஒரு சாதாரண மரத்தை வெட்டிக்கொண்டு வந்தாராம். "ஏன் இத்தனை சாதாரண மரத்தை வெட்டினாய்" என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார். "என்னுடைய முந்தைய அனுபவத்தால் இந்த முடிவுக்கு வந்தேன். முதலில் இது நல்ல மரமாகவே தோன்றியது. இதை கடந்து போய் இதைவிடவும் மோசமான மரமே எதிர்ப்பட்டால், இதையும் இழக்க வேண்டியிருக்குமே என்று வெட்டிவிட்டேன்" என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.


"இதுதான் திருமணம் என்பது என் மகனே. காதல் என்பது மனிதனுக்கு நேர்கிற அற்புதமான அனுபவம். கையில் கிடைப்பதை விட கோதுமை வயலில் தவறி விடும்போதுதான் அதன் மகத்துவம் தெரிய வருகிறது. திருமணம் என்பது வெட்டிய மரம் போன்றது. சமரசம் செய்து கொள்கிறாய்" என்று ஆசிரியர் விளக்கினாராம். காதல் என்பது கைகளில் கிடைக்காத கற்பனைப் பறவையாகவே இருக்கிறது. திருமணம் என்பது நிஜ வாழ்வின் ஏமாற்றத்தை புரியவைக்கிறது. வானமெல்லாம் பறந்தவர்கள் தங்கள் சிறகுகளை உதிர்த்துக் கொண்டு கோழிகளாகி அங்கே குப்பையைக் கிளற ஆரம்பிக்கிறார்கள்.


காதலிக்கும்போது இருவரும் உள்ளங்களில் ஒன்றாய் ஏற்றி வைத்திருந்த அகல்விளக்கை அணைத்துவிட்டு, திருமணத்திற்குப் பிறகு ஆளுக்கொரு டார்ச்லைட்டை வைத்துக் கொள்கிறார்கள். டார்ச்லைட்டால் தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட இடத்தில் மட்டும் வெளிச்சத்தை செலுத்திட முடிகிறது. அடுத்தவர் முகங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. முக்கியமாக தங்களை இருட்டில் வைத்துக்கொள்ள முடிகிறது. அப்படியே தங்கள் முகங்களில் அடித்துப் பார்த்தால் பேய் பிசாசாய் பயமுறுத்துகிறது.


காதலர்கள் நிஜவாழ்வின் கணவன் மனைவியாக மாறுகிறபோது முதலில் அந்த வசீகரமான புன்னகைகள களைந்து விடுகிறார்கள். திருமணம் அவரவர் சுயரூபங்களை அடுத்தவர்களுக்கு தோலுரித்து காட்டி விடுகிறது. தான் காதலித்த ஆண் இவனல்ல என்பது அவளுக்கும், தான் காதலித்த பெண் இவளல்ல என்பது அவனுக்கும் வெகு சீக்கிரத்தில் தெரிய வருகிறது. சிலருக்கு எதாவது ஒரு கணத்தில் முகத்தில் அறைகிற மாதிரி உறைக்கிறது. ஏமாந்து விட்டோம் என்பதைக் காட்டிலும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதே வாழ்வு முழுவதும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. உடைந்து போகிறார்கள். விதியே என ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள். வாழ முடியாதவர்கள் பிரிந்துவிட தீர்மானிக்கிறார்கள். காதலித்த காலங்களும், ரகசியமாய் பரிமாறிய பார்வைகளும் மட்டுமே நிலைத்திருக்கும் ஒரு உலகத்திற்குள் தனிமைகளில் சென்று வருகிறார்கள். எந்த முதுமையிலும் அவர்கள் அங்கு மட்டுமே இளமையாக இருக்கிறார்கள்.


ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் புரிந்தவர்களுக்கும், காதலிக்காமல் திருமணம் புரிந்தவர்களுக்கும் வித்தியாசமில்லை. சின்னச் சின்னச் சண்டைகளும், சமயங்களில் பெரிய சண்டைகளும் நடக்கின்றன. பேசுவதற்கு சில வார்த்தைகள் மட்டுமே வைத்திருக்கிறார்கள். இருட்டில் மௌனமாக ஓருடல் ஈருயிராகி குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். காலையில் மீண்டும் பழைய மனிதர்களாகிப் போகிறார்கள். தொலைத்துவிட்ட வாழ்வின் அர்த்தம் குழந்தைகளிடம் ஒட்டிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. 'நிலவைப் போல, வானத்தைப் போல நம் காதலும் மாறாது' என்று ஒலித்த வசனங்கள் வீடுகளிலிருந்து பெருக்கி வெளியே தள்ளப்படுகின்றன.


கண்களின் சம்மதம் பெற்று காதலை வளர்த்து, சமூகத்தின் சம்மதம் பெற்று காதலை நிறைவேற்றினாலும், பிறகு காதல் மேகங்கள் தானாகவே கலைந்து போய்விடுகின்றன. மோகத்தின் ஆயுள் முப்பது நாளாகவும், ஆசையின் ஆயுள் அறுபது நாளாகவும் இருக்கலாம். காதலின் ஆயுளும் அப்படியா இருக்க முடியும்? ஜாதி, மதம், வசதி, கல்வி என பல புறத்தடைகளையும் தாண்டி காதலர்கள் ஒன்று சேர்வதே இங்கு பெரிய விஷயமாயிருக்கிறது. அப்படி சேர்ந்த காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாமல், வெறுமையும், விரக்தியும் அடியாழத்தில் மண்டிக் கிடக்க வாழ்ந்து கொண்டிருக்கிற கொடுமைதான் குடும்பங்களுக்குள் காணப்படுகிறது.


இந்த வேதனையை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தனது 'வாளின் தனிமை' சிறுகதை தொகுப்பில் சோதனைகளாய் செய்து சொல்லியிருப்பார். காதலித்தவர்கள் பிரிந்து விடுவார்கள். வேறு வேறு துணைகளோடு திருமணம் செய்து கொள்வார்கள். சந்தோஷமாய் இருக்க மாட்டார்கள். காதலித்தவர்களே ஒருவரையொருவர் திருமணமும் செய்து கொள்வார்கள். அவர்களும் சந்தோசமாய் இருக்க மாட்டார்கள். காதலிக்காத இருவர் திருமணம் செய்து கொள்வார்கள். சந்தோஷமாய் இருக்க மாட்டார்கள். காதல் என்பது சந்தோஷம் இல்லையா. காதலிக்கும்போது கனவாயிருக்கிறது திருமணம். திருமணத்திற்கு பிறகு காதலே கனவாகி விடுகிறது. இதைத்தான் "ஆஹா...காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும் வரை." என கேள்வியும் பதிலுமாய் தமிழ்ச் சினிமாப் பாட்டு ஒலிக்கிறது. முன்பெல்லாம் திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பந்தமாக இருந்தது. வரதட்சனைக் கொடுமை, சித்ரவதை, ஆண்மையின்மை, மலட்டுத்தன்மை, இரண்டாம் தாரம் போன்ற பிரச்சினைகளுக்கு விவாகரத்து தீர்வாக கருதப்பட்டது. இன்று சிறிய அளவில் ஒத்துப்போக வில்லையென்றாலும் உடனடித் தீர்வாக விவாகரத்து முன்வைக்கப்படுகிறது.


காதலின் மைதானத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே விளையாட முடியும். இருவருமே வெற்றி பெற முடியும். ஆனால் இங்கு இருவருமே தோற்றுப் போய் நிற்கிறார்கள். காதலில் வீழ்ந்து விடுவதாகவே (fall in love) மொழிகளின் வார்த்தைகள் இருக்கின்றன.


எது நமது காதலர்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது? எழுத்திலும், கலைகளிலும் வாழ்வின் அற்புத அனுபவமாக அறியப்படுகிற காதலை சொந்த வாழ்க்கையில் மனிதர்கள் ஏன் தொலைத்து விட்டு நிற்கிறார்கள்? சிலிர்ப்பையும், கனவுகளையும் ஒரு காலத்தில் அள்ளி அள்ளித் தந்த இந்தக் காதல் தன்னுடைய பரப்பை வாழ்க்கை முழுவதும் விரித்து வைக்க முடியாமல் ஏன் ஒரு குறிப்பிட்ட பருவத்தின் உணர்வாய் மட்டும் சுருங்கி விடுகிறது? காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் பிடித்தமானவர்களாகவும், அழகானவர்களாகவும் இருந்த காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு ஏன் அந்நியமாகவும், சலித்தும் போகிறார்கள்?


இதற்கான விடைகளையறிய, காதலை நாம் மனித குலத்தின் மிக நீண்ட வரலாற்றிலிருந்து எடுத்து வந்து வாசிக்க வேண்டியிருக்கிறது. அப்போது தான் காலத்தின் தொப்புள் கொடியிலிருந்து உயிர்த்து வந்திருக்கிற ஆண் பெண் உறவுகளையும் அதிலிருந்து கிளைத்து வந்திருக்கும் இந்தக் காதலையும் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.


காதல் வயப்படுகிற இந்த நவீன காலத்தின் ஆண்களும், பெண்களும் தாங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனர் என்று பின்னோக்கி பார்க்கும் போது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.



தொடரும்....

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்லதொரு பதிவு. யதார்த்தமானதும்கூட. ஆனால், காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ள ஒரு வாக்கியத்தை வைத்திருக்கிறார்கள். 'என்னதான் இருந்தாலும் நாங்கள் இருவரும் பிரியாமல் இருப்பதற்கான அடிநாதமாக காதல்தான் இருக்கிறது."என்கிறார்கள். காதல் அக்கணப் பொழுதில் பேரானந்தமாயிருக்கிறது. பிறகோ... நீங்கள் சொன்னதுபோலத்தான் எங்கோ மறைந்துபோய்விடுகிறது. அதை ஒத்துக்கொள்ள எல்லோரும் அஞ்சுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. படிக்க மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. எனக்கு என்றுமே சரியாய் புரியாத விஷயங்கள் காதல், கவிதை, கடவுள் :-)

    பதிலளிநீக்கு
  3. "காதலர்கள் நிஜவாழ்வின் கணவன் மனைவியாக மாறுகிறபோது"
    காதல் செய்யும்போது மேகத்தில் உலவலாம். எனக்கு நீ உனக்கு நான்தான். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு மேகத்திலிருந்து கிழ் இறங்கவேண்டும். . மேகத்தில் இவர்கள் இரண்டு பேர்தான் .

    கிழே மாமனார்/மாமியார்/மை.ன்/மை.னி/ மற்றும் பலர். இங்கு வாழ வேண்டும். காதலிக்க முடியாது. காதல் செய்தால் out of fashion . மைன்ட் செட் வந்து விடுகிறது. பிரச்சனை வளையங்கள் காத்திருக்கின்றன். சந்திக்க வேண்டும். Comment moderation மாதிரி லவ் moderate ஆகிவிடுகிறது.

    Matured love ஆக இருந்தால் கல்யாணத்திற்கு பிறகு தொடரலாம் .இது 99.99% சாத்தியம் இல்லை.. அன்பு என்ற வடிவில் தொடராலாம்.. அல்லது படுக்கையில் காதலிக்கலாம் .

    முதுமையில் நெருக்கம்(காதல்?) கூடுகிறது. மகள்/மகன் விலகி விடுவதால் .
    எனக்கு தெரிந்த இருவர் கல்யாணத்திற்கு பிறக்கும் கூட கடைசி காலம் வரை காதலித்துகொண்டிருந்தார்கள். "சரியான மெண்டல் கேஸ்" என்றார்கள் அக்கம்பக்கத்து சங்க தமிழர்கள்

    பதிலளிநீக்கு
  4. தமிழ்நதி!

    உண்மைதான்.
    தாங்கள் ஏமாறியதை யாரும் வெளியே சொல்வதில்லை.
    அதேநேரம், நாமும் ஏமாற்றியிருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை.
    இந்த பரஸ்பரம் மறைத்தலே, குடும்ப வாழ்வின் அடிநாதமாய் இருக்கிறது!!!

    பதிலளிநீக்கு
  5. ராமச்சந்திரன் உஷா!

    ரொம்ப உண்மை!
    புரிவதற்கு நாம் மெனக்கெடுவதுமில்லை.
    அதனால்தான் இன்னும் தமிழ்ச் சினிமாக்களை நாம் ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. ரவிசங்கர்!

    நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.
    மற்றவர்கள் முன் (மாமனார்/மாமியார், மை ) முன்னால்
    ஏன் காதலிக்க முடியாது.
    காதல் என்பது பிரிவில், சண்டையில், முரண்பாட்டில், கோபத்தில் என பல உணர்வுகளிலும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.
    பிரிவில் அல்லது முதுமையில் மட்டுமல்ல!

    பதிலளிநீக்கு
  7. மதுமிதா!

    இப்போது நீங்கள் கருத்து பதிவு செய்ய முடியலாம்.
    சரி செய்துவிட்டேன் என நினைக்கிறேன்.

    நீங்கள் இங்கே கமெண்ட் போட முடியாமல், ஈமெயிலுக்கு அனுப்பிய
    கமெண்ட்டை நீங்கள் கேட்டுக் கொண்டது போல அப்படியே பதிவு செய்கிறேன்.

    //உங்கள் பதிவில் கமெண்ட் இட முடியவில்லை. மூன்று முறை க‌மெண்ட் எழுதி போஸ்ட் செய்ய‌ முடிய‌வில்லை. இதை காப்பி பேஸ்ட் செய்துவிடுங்க‌ள் மாத‌வ‌ராஜ்.

    காதல் என்றும் தோற்பதில்லை. காதலர்கள்தான் தோற்றுப்போகிறார்கள்:)

    அதீத‌ காத‌லில் வீழ்கையில் காத‌லிக்க‌ப்ப‌டுப‌வரைத் த‌னது பொருளாக‌ப் பார்க்க‌ப்ப‌டும் அவ‌ல‌ம் நிக‌ழ்கையில் சூழல் முற்றிலுமாய் மாறிவிடுகிறது. அங்கே ஆர‌ம்பிக்கிற‌து வீழ்ச்சி.

    தனிப்ப‌‌திவுடும் அள‌வில் கமென்ட் போடவேண்டி இருப்ப‌தால் இத்துட‌ன் நிறுத்திக் கொள்கிறேன்.

    தொட‌ர்ந்து எழுதுங்க‌ள் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.//

    பதிலளிநீக்கு
  8. பிளாட்டோ சாக்ரடீஸிடம் கேட்டாரா? வேறு ஆசிரியரிடம் கேட்டாரா?

    சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், அலெக்சாண்டர் என தத்துவ இயலிலும் குரு சிஷ்யப் பரம்பரை தொடர்கிறதோ.

    காதல் என்றால் என்ன என்று தேடிக்கொண்டே இருந்தால் அம்பேல்தான். காதலை அறிவதற்கு ஆராய்ச்சி செய்வ‌து எந்த விதத்திலும் பிரயோசனம் தராது.

    காதலில் 'தொபுகடீர்' என்று விழுந்துவிட வேண்டும்:)

    பதிலளிநீக்கு
  9. காதல் என்று இல்லை. எந்த உறவாக இருந்தாலும் எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருக்கும் போது ஏமாற்றமும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.

    காதல் திருமணம் என்ன, பொதுவாகத் திருமணங்கள் கசந்து போவதற்குக் காரணமே ஆணாதிக்க சமுதாய்ம் தான்.

    திருமணம் ஆனதும் தேவதையாக இருந்த காதலி வீட்டு வேலைக்காரியாக, சமையற்காரியாக, தாதியாக், அல்லது அலங்காரப் பொருளாக மட்டும் போய் விடுகிறாள். அவ‌ள் ஆசையாக‌ச் செய்யும் ஒவ்வொரு செய‌லும் "Taken For Granted" ஆக‌ எடுத்துக் கொள்ள‌ப் ப‌டுகிற‌து. இத‌னால் எரிச்ச‌லுறுகிறாள்.
    ஆண்களுக்கோ பல நேரம் தாங்கள் என்ன‌ த‌வ்று செய்கிறோம் என்ப‌தே புரிவ‌தில்லை.

    இய‌ல்பாக‌வே ஆண்க‌ள் சுயந‌ல‌வாதிக‌ளாக‌ இருக்க‌வும், அதில் கொஞ்ச‌ம் கூட‌ குற்ற உண‌ர்ச்சியும் இல்லாது இருக்க‌வும் இந்த‌ ச‌முதாய‌ம் அனும‌திக்கிற‌து. என‌வே ஆண் பெண் சம்த்துவ‌ம் இல்லாத‌ ச‌முதாய‌த்தில் பெண்க‌ளுக்கு எந்த‌ வ‌கையான திரும‌ண‌முமே ஒரு வித‌ கைவில‌ங்கு தான். அதில் இய‌ன்ற‌ வ‌ரை ம‌கிழ்ச்சியாக‌வும் வெற்றிக‌ர‌மாக‌வும் வாழும் பெண்க‌ள் பாராட்டுக்கு உரிய‌வ‌ர்க‌ள்.

    பதிலளிநீக்கு
  10. மதுமிதா!

    //காதல் என்றும் தோற்பதில்லை. காதலர்கள்தான் தோற்றுப்போகிறார்கள்//

    இது ஒரு சினிமா வசனம் போலத் தெரிகிறது, பரவாயில்லை. காதலர்கள் ஏன் தோற்றுப் போகிறார்கள்? காதல் தோற்காமல் காதலர்கள் எப்படி தோற்றுப்போகிறார்கள்? காதலுக்கும், காதலர்களுக்கும் சம்பந்தமில்லையா? பதில் சொல்லுங்கள் மதுமிதா...சர்வலோக காதல் தலைவியே..

    பதிலளிநீக்கு
  11. மதுமிதா!
    //காதல் என்றால் என்ன என்று தேடிக்கொண்டே இருந்தால் அம்பேல்தான். காதலை அறிவதற்கு ஆராய்ச்சி செய்வ‌து எந்த விதத்திலும் பிரயோசனம் தராது.//

    காதலை தேடிக் கொண்டிருக்க முடியாது. காதலை அறியத்தான் மனிதன் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்கிறான். இது ஆராய்ச்சி இல்லை. சோதனை.

    பதிலளிநீக்கு
  12. மதுமிதா!
    //பிளாட்டோ சாக்ரடீஸிடம் கேட்டாரா? வேறு ஆசிரியரிடம் கேட்டாரா?.//

    ஒரு ஆசிரியரிடம் தான். சந்தேகமிருந்தால் இந்த முகவரிக்கு சென்று படியுங்கள்.
    http://penglipurlara.wordpress.com/2008/09/13/plato-on-love-and-marriage/

    பதிலளிநீக்கு
  13. தீபா!

    நீ சொல்வது முற்றிலும் உண்மை.
    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. //காதலில் 'தொபுகடீர்' என்று விழுந்துவிட வேண்டும்:)//


    தங்கத் தலைவி அருமையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்! எல்லாரும் அப்ப‌டித்தான் விழுகிறார்க‌ள். ஆனால் ஒன்று அதில் மூழ்கி இற‌க்கிறார்க‌ள் இல்லை வெகு விரைவில் க‌ரையேறி விடுகிறார்க‌ள். அப்படி எல்லாம் இல்லாமல், காதல் என்னும் ஆற்றில் ஆன‌ந்த‌மாக நீந்திக்கொண்டே இருப்ப‌து எப்ப்டி என்று ஆசிரிய‌ர் அனுபவரீதியாக‌ விள‌க்குவார்.

    சரிதானே Uncle? ;-))

    பதிலளிநீக்கு
  16. அருமைங்க.!!! இது தான் வாழ்க்கையின் யதார்த்தமோ?

    பதிலளிநீக்கு
  17. Arnold Edwin !

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!